who gave order for tuticorin gun fire

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? : முதல்வர் ஆவேசம்

அரசியல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 21) காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, “ஏதேனும் ஒரு சம்பவம் நடந்த உடன் குற்றவாளிகள் தப்பி விட்டார்கள் என்றாலோ, உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ, குற்றவாளிகளைக் காப்பாற்றினார்கள் என்றாலோ புகார்கள் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்.

அந்த குற்றவாளி யாராக இருந்தாலும் எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவர்களை நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம்.

தமிழ்நாட்டில் சாதி, மத சண்டைகள் இல்லை. கூட்டு வன்முறைகள் இல்லை. துப்பாக்கிச் சூடு, கலவரங்கள், காவல் நிலைய மரணங்கள் இல்லை.

இது எல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாக தான் புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், முதலீடுகள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி வருகின்றன.

காவல்துறையினர் மாநிலம் முழுவதும் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஆட்களை கடத்தி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, அதிக பணம் வசூலித்து சமூக விரோத செயலில் ஈடுபடுவது, நிதி நிறுவன மோசடி, சைபர் குற்றம், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புபவர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தில் பணிபுரிய தேவையான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதற்கிடையே தான் வதந்தி பரப்பப்பட்டது. இது பொய்யாக பரப்பப்படும் வீடியோக்கள் மற்றும் வதந்தி என்று காவல் துறை இயக்குநர் உடனடியாக விளக்கம் தந்தார்.

மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் வட மாநில தொழிலாளர்களிடம் நேரடியாகப் பேசினார்கள். மேலும் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனையைத் தமிழ்நாடு அரசு கையாண்ட விதத்தை பிற மாநில அரசுகளும் மனம் திறந்து பாராட்டின.

சட்டம் ஒழுங்கை பொறுத்தவரைப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் ஆட்சியில் என்பதையும், அதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரித்தது எந்த ஆட்சியில் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

நூறு நாட்கள் அமைதியாக நடந்த அந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்லவே இல்லை. முதலமைச்சராக இருந்த போதும் சரி, இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போதும் சொல்ல விரும்பவில்லை.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த போது ஏற்பட்ட கலவரத்தின் போது காவல்துறையினர் உயிரிழப்பு ஏற்படாமல் சிறப்பாக செயல்பட்டனர்.

காவல் நிலைய மரணங்களைத் தடுப்பதில் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு 11 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்தது.

2023-ல் இதுவரை காவல்நிலைய மரணங்கள் நிகழவில்லை. கடந்த ஆட்சியில் இருந்ததை விட இந்த ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் குறைந்து விட்டது. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற அளவிற்கு இந்த அரசு செயல்படும்” என்று பேசினார்.

மோனிஷா

முதல்வரின் பதிலுரையைப் புறக்கணித்த அதிமுக: சபாநாயகர் வருத்தம்!

வருவாய் பற்றாக்குறை ரூ.30,000 கோடியாக குறைப்பு: முதல்வர்

who gave order for tuticorin gun fire in assembly
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *