புதுக்கோட்டை மேயர் திலகவதி- மறைந்த புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளர் செந்தில் ஆகியோரின் மகனான திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் திருமணம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடந்தது.
இந்தத் திருமண விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்து நடத்தி வைப்பதாக இருந்த நிலையில், அன்று அமைச்சரவை கூட்டம் என்பதால் 9 ஆம் தேதியே வந்து திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார். CM office greeting controversy
அப்போது கடந்த டிசம்பரில் மறைந்த புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், மணமகனின் தந்தையுமான செந்தில் குறித்து புகழாரம் சூட்டினார். திருமண மேடையிலேயே மறைந்த செந்திலின் உருவப்படத்துக்கும் மரியாதை செலுத்தினார் உதயநிதி.

முதல்வரின் வாழ்த்துக் கடிதம்!
இந்த நிலையில் அதே 9 ஆம் தேதி, இத்திருமண விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துக் கடிதம் திமுகவினரின் வாட்ஸ் அப் க்ரூப்களில் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

வாழ்த்துக் கடிதத்தில் ஏன் பரபரப்பு என்று கேட்டபோது அந்த கடிதத்தை நமக்கு அனுப்பிய புதுக்கோட்டை திமுகவினர்,
“இந்த வாழ்த்துக் கடிதத்தில் பெறுநர் என, ’திரு. ஆ.செந்தில், புதுக்கோட்டை மாநகர செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்’ என குறிப்பிட்டுள்ளனர். இதுதான் பரபரப்புக்குக் காரணம்.
புதுக்கோட்டையின் மாநகர செயலாளரான செந்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது இறுதி நிகழ்வில் அமைச்சர் நேரு, அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அவர் இறந்து இரு மாதம் ஆகிவிட்ட நிலையில் அவர் பெயருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாழ்த்துக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது. CM office greeting controversy
அதிகாரிகள் கவனக் குறைவா?

முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பல வாழ்த்துக் கடிதங்கள், இரங்கல் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றில் முதல்வரின் டிஜிட்டல் கையெழுத்து இடம்பெறும். மிக கவனமாக செயல்படும் அதிகாரிகள் குழுவை நம்பியே இந்த செயல்பாடுகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஆனால், பிப்ரவரி 9 ஆம் தேதியிட்ட இந்த வாழ்த்துக் கடிதத்தில் செந்திலை ஏதோ தற்போதைய புதுக்கோட்டை திமுகவின் மாநகர செயலாளர் போல குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவரது மனைவியை புதுக்கோட்டை மேயர் என்றும் அடையாளப்படுத்தவில்லை.
சில அதிகாரிகள் செய்யும் தவறால் ஒட்டுமொத்த முதல்வர் அலுவலகமே கவனக் குறைவாக இருப்பது போன்ற விவாதம், எங்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது” என்கிறார்கள் புதுக்கோட்டை திமுகவினர். CM office greeting controversy
நாம் இது தொடர்பாக செந்திலின் மகன் கணேஷிடம் அலைபேசியில் பேசினோம். திருமண வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு, வாட்ஸ் அப்பில் உலா வரும் இந்த வாழ்த்துக் கடிதம் பற்றி அவரிடமே கேட்டோம்.
“ஆமாம்… அந்த கடிதத்தை நானும் பார்த்தேன். எங்கள் அம்மா பெயரை குறிப்பிட்டு தனியாக இன்னொரு வாழ்த்துக் கடிதமும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கிறது” என்றார்.