தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாரணாசியில் உள்ள பாரதியார் இல்லத்தில் இன்று (டிசம்பர் 11) பாரதியாரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
மத்திய அரசு சார்பில் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் பாரதியார் நினைவு இல்லத்தை திறந்து வைத்திருப்பது அரசியல் அரங்கில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் உத்தரபிரேத மாநிலத்தின் காசிக்கும் இடையிலான கலாச்சார உறவை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியானது வரும் டிசம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் பன்னெடுங்காலமாக பிணைப்பு உள்ளது. காசிக்கு துளசிதாசர் என்றால் தமிழ்நாட்டிற்கு திருவள்ளுவர்.
தமிழக திருமணங்களில் காசி யாத்திரை வழக்கம் உண்டு. காசி பட்டும், காஞ்சி பட்டும் சிறந்து விளங்குகிறது.” என்று பேசியிருந்தார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக அரசு கலந்து கொள்ளாதது அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக பாஜவினர், “காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசிற்கு அழைப்பு விடுத்தும் புறக்கணித்துள்ளார்கள்.
தமிழ் என்பது எங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என அரசியலுக்காக மட்டுமே தமிழ் மொழியை திமுகவினர் பயன்படுத்துகிறார்கள்.” என குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,
“காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து சமய அறநிலையத்திற்கு எந்தவித அறிவிப்பும் வரவில்லை. மேலும் மாநில அரசிடம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.” என்றார்
இந்தநிலையில், கடந்த நவம்பர் 18-ஆம் தேதி, வாரணாசியில் உள்ள பாரதியார் வீட்டிற்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரதியாருக்கு நினைவகம் அமைப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழக அரசு ஜூலை 5-ஆம் தேதியே வாரணாசியில் உள்ள பாரதியார் வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையை நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்தநிலையில், பாரதியார் பிறந்தநாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்து, அந்த நினைவு இல்லத்தினை திறந்து வைத்தார்.
மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பாரதியார் மார்பளவுச் சிலையினை திறந்து வைத்தார்.
தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மூலம் மேம்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அதே வாரணாசியில் பாரதியார் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
“போக்சோ சட்டங்களின் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” – சந்திரசூட்
பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: மக்களுக்கு எச்சரிக்கை!