தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 19) ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசுகையில், திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அவருக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருந்தது. அதற்கான முழு பட்டியல் தன்னிடம் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர காவல் ஆணையர்கள் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.
குற்றச்செயல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். முக்கிய வழக்குகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் முதல்வரிடம் எடுத்துரைக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்து முதல்வர் ஸ்டாலின் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
“சிலர் மைக்கை பார்த்தாலே டென்ஷன் ஆகின்றனர்” – ஜெயக்குமார்