4 முதலமைச்சர்கள் அல்ல, யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார்களோ, அவர்கள் எல்லாம் சேர்ந்ததே இந்த ஆட்சி” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நேற்று (செப்டம்பர் 19) மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உயரதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலமாக வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள். மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஆட்சியாளர்களின் சாதனை.
மாற்றத்திறனாளிகள் நலத் துயரை கலைஞர் கண்ணும் கருத்துமாகக் கவனித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் துறைகளை பிரித்துக் கொடுத்த நான், மாற்றுத் திறனாளி துறையை மட்டும் நானே வைத்துக்கொண்டேன்.
சாதாரண கட்டண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் சென்று வர ஆணையும் வழங்கப்பட்டது.
இடஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் இருந்த அவலங்கள் உங்களுக்கு தெரியும்.
இப்போது நம் ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளையெல்லாம் பரப்ப நினைக்கிறார்கள். அவர்கள் இப்போது போடும் ஆர்ப்பாட்ட கோஷங்கள் மக்களுக்கு தெரியாதா?
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள்.
அதிகாரத்துக்கு வந்துவிட்டால் விலகிச் செல்பவர்கள் அல்ல. திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிதாக கண்டுபிடித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
4 முதலமைச்சர்கள் அல்ல, யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, எந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அனைவரும் சேர்ந்துதான் இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்தகால அதிமுக ஆட்சியைப்போல் அல்ல இந்த ஆட்சி. இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிடமாடல் என்ற பெரும் தத்துவம் ஆகும். திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியல்ல. மாறாக, இது ஓர் இனத்தின் ஆட்சியாக உள்ளது.
நிதி ஆதாரம், சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவேன் என்பது உறுதி” என்றார்.
ஜெ.பிரகாஷ்
எடப்பாடியின் திடீர் டெல்லி பயணம்: பின்னணி என்ன?
சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா?: 4 முக்கிய காரணங்கள்!