எம்பி சீட் அதிருப்தி: சிவலிங்கம் வீட்டுக்கு அதிகாலையில் சென்ற கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகிகள்… நேருவை அனுப்பிய ஸ்டாலின்

Published On:

| By Aara

திமுக வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவின் வேட்பாளர் பட்டியலில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கான வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு பதில் மலையரசன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தியான எஸ்.ஆர்.சிவலிங்கம் நேற்று (மார்ச் 20) அண்ணா அறிவாலயத்தில் இருந்து அதிருப்தியோடு கிளம்பி, போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். பகல் 12 மணிக்கு காணொளி மூலமாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் சிவலிங்கம் கலந்துகொள்ளவில்லை.
இந்தத் தகவல் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதும், சிவலிங்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். பலரும் தொடர்புகொண்டும் அவரது போன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது.  சிவலிங்கம் தனது மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் திட்டத்தில் இருக்கிறார் என்று நேற்று (மார்ச் 20) டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்டிருந்தோம்.

சிவலிங்கத்தின் நீண்ட நாள் நண்பரான அன்னியூர் சிவாதான் முயற்சிகள் மேற்கொண்டு அவரை லயனில் பிடித்தார். அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலினே சிவலிங்கத்திடம் போனில் பேசினார்.

‘என்ன சிவலிங்கம்…’ என்று ஸ்டாலின் கேட்க,

‘மாவட்டத்துல அசிங்கமா போச்சுங்க. கட்சியில நாப்பது வருசமா இருக்கேன். நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியலங்க’ என்று குமுறியிருக்கிறார் சிவலிங்கம்.

அதற்கு ஸ்டாலின், ‘நீங்க தப்பு பண்ணியிருந்தீங்கன்னா நான் உங்க லயன்ல வந்து பேசிக்கிட்டிருப்பேனா… ஒண்ணும் வருத்தப்படாதீங்க. நான் பாத்துக்குறேன்’ என்று சிவலிங்கத்தைத் தேற்றினார்.

இந்நிலையில் முதல்வரின் உத்தரவுப்படி இன்று (மார்ச் 21) அதிகாலை கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிவாக்கில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் சிவலிங்கம் வீட்டுக்கு திமுக நிர்வாகிகள் சென்றனர்.

 

கள்ளக்குறிச்சி தெற்கு மாசெ வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடக்கு மாசெ உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் இவர்களோடு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மலையரசன் ஆகியோர் இன்று காலை சிவலிங்கம் வீட்டுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவுதான் வீடு திரும்பியிருந்தார் சிவலிங்கம்.

முதலில் புதிய வேட்பாளரான மலையரசன்  சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினார். வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சிவலிங்கம் அவரது மனைவி ரத்தினம் அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றனர்.

கண் கலங்கிய மலையரசன், ‘அண்ணா… நான் சாதாரணமாதான் அண்ணே விருப்ப மனு கொடுத்தேன். நீங்கள்லாம் இருக்கும்போது எனக்கு வாய்ப்பு கொடுப்பாங்கனு தெரியாதுண்ணே’ என்று கூறினார். கள்ளக்குறிச்சி இரு மாசெக்களும் சிவலிங்கத்திடம் தனியாக சென்று பேசினார்கள். பிறகு இந்த சந்திப்பு பற்றிய தகவல் முதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவும் இன்று காலை சேலம் வந்தடைந்தார். கள்ளக்குறிச்சி நிர்வாகிகள்  சிவலிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்தபோதே, அமைச்சர் நேரு வந்திருக்கும் தகவல் கிடைக்க அவரை வரவேற்க சிவலிங்கமும் புறப்பட்டார்.

சேலம் வந்த நேருவை கள்ளக்குறிச்சி வேட்பாளரும் நிர்வாகிகளும் வரவேற்றனர்.

அமைச்சர் நேருவும் சிவலிங்கத்திடம் முதல்வர் ஸ்டாலின்  சொன்ன சில விஷயங்களை சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்.

நாம் இதுகுறித்து ஆத்தூர் திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கள்ளக்குறிச்சி தொகுதி 2009 இல் இருந்து இருக்கிறது. இந்த எம்பி தொகுதிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்டம், சேலம் மாவட்டம் என இரு மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளும் வருகின்றன.

ஆனால் இதுவரை வாய்ப்பு வழங்கப்படதெல்லாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள் இருந்துதான். ஆதிசங்கராக இருக்கட்டும், கௌதம சிகாமணியாக இருக்கட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இதே கள்ளக்குறிச்சி எம்பி தொகுதிக்குள் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி என சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ. தொகுதிகள் இருக்கின்றன. இங்கிருந்து ஒருவர் எம்பியாக வருவார் என்று எதிர்பார்த்தோம். சிவலிங்கம் பெயர் பேசப்பட்டதும் ஆவலோடு இருந்தோம். ஆனால் பழையபடி எம்பி வாய்ப்பு கள்ளக்குறிச்சி பக்கமே போய்விட்டது” என்கிறார்கள்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவினரிடம் கேட்டபோது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் என மூன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி என அந்த பக்கம் இருக்கும் மூன்றிலும் அதிமுக அல்லவா வெற்றி பெற்றிருக்கிறது? திமுக ஜெயித்த பகுதிகளில் இருந்துதானே திமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திமுக தோற்ற பகுதிகளில் இருந்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை எப்படி ஏற்க முடியும்?  ஒருவேளை சிவலிங்கத்துக்கு சீட் கொடுத்து அவர் எம்பி ஆகிவிட்டால்… செல்வகணபதி,  சிவலிங்கம் என சேலத்துக்கு இரு எம்பிக்கள் இருப்பார்கள். பிறகு கள்ளக்குறிச்சிக்கு  என எம்பியே இருக்க மாட்டார்களே?” என்கிறார்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel