“அனைவருக்குமான வளர்ச்சியை மனதில்ன்வைத்தே புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று (செப்டம்பர் 5) கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். மேலும் அமைச்சர்கள் க.பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டது.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பள்ளியில் படிக்கவரும் மகளிருக்கு கல்லூரியில் வருவதற்கு தயக்கமும் தடையும் இருக்கிறது. அந்தத் தடையை உடைப்பதற்காகத்தான் இந்தப் புதுமைப் பெண் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். படிக்கவைக்க காசில்லையே என்கிற கலக்கம் பெற்றோருக்கு இருக்கக்கூடாது. இன்றைக்கு மகளிருக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. இது, பெண்களுக்கு சமூகப் பொருளாதார விடுதலையை வழங்கியிருக்கிறது. இதனால், 600 ரூபாயிலிருந்து 1,200 ரூபாய் வரை செலவு மிச்சமாகிறது என பெண்கள் சொல்கின்றனர். இதனால் அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் இழப்பு என்பதை நான் இங்கு சொல்ல மாட்டேன். இதன்மூலம் எத்தனை லட்சம் பெண்கள் சிறைப்படைகிறார்கள் என்பதுதான் எங்களது லட்சியம். அந்தவகையில் அது ஒரு முதலீடுதான்.
அத்தகைய எண்ணத்தோடுதான் இந்தப் புதுமைப் பெண் திட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம். திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அடக்கி ஒடுக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்தான் இந்த அம்மையார். படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காக போராடியவர் அவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கையின் முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவை திறந்துவிட்டவர் அவர். 100 ஆண்டுகளுக்கு முன்பு மகத்தான புரட்சியை தந்தை பெரியாரோடு இணைந்து நடத்திக் காட்டியவர் அவர். திராவிட இயக்க தீரர் விருது பெற்ற முதல் நபரும் அவரே. அப்படிப்பட்ட அம்மையார் பெயரில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
இதன்மூலம் வழங்கப்படும் இந்த 1,000 ரூபாய் தொகையை அரசு இலவசமாக வழங்குவதாகக் கருதவில்லை. இதை ஒரு கடமையாகவே அரசு நினைக்கிறது. அத்தகைய கடமைகள் நம் அரசுக்கு இருப்பதால்தான் இதுபோன்ற திட்டங்களை தீட்டிவருகிறோம். பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன்மூலம் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தைத் திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். ஒவ்வொரு பெண்ணும் சொந்தக்காலில் நிற்பார்கள். யாருடைய தயவையும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பார்க்கவும் வேண்டாம். எந்தக் கொடுமையையும் இழிவையும் சகித்துக்கொண்டு அடங்கிப் போக வேண்டாம்.
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் நம்முடைய ஆட்சியின் மையக்கருத்து என்பது இதுதான். அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்குவது என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதே” என கூறினார்.
இந்த உரையின் போது முதல்வர் ஸ்டாலின் மாணவிகளுக்கு ஆட்டுக்குட்டி கதை சொல்லி அசத்தினார். இதுகுறித்து அவர், “சமூக நீதி பற்றி கலைஞர் ஒரு எடுத்துக்காட்டை சொல்லியிருக்கிறார். அதாவது. மந்தைகளில் இருந்து ஆடுகளை ஓட்டி வரக் கூடிய ஒருவர் ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் சுமந்து வருவார். அந்த ஆடு நடக்க முடியாததாக இருக்கும். அது காயம்பட்டதாக இருக்கும். அப்படி தோளில் தூக்கி வருவது ஆட்டுக்கு காட்டும் சலுகை அல்ல. மேய்பரி கடமை. அத்தகைய கடமை அரசுக்கு இருப்பதால், இதுபோன்ற திட்டத்தை தீட்டி வருகிறோம்” என குறிப்பிட்டார்.
ஜெ.பிரகாஷ்
ஆட்டுக்குட்டி என்றால் அது அண்ணாமலை என்று பொருளாகி விட்டது..