இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது: பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Published On:

| By srinivasan

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஆகஸ்டு 14) அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில்,

”இந்திய ஒன்றியத்தின் விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், (ஆகஸ்ட் 15) நாட்டுக் கொடியை உயர்த்துகிறேன்.

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.

தேசியக் கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்..

மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும்.  இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, அமைச்சரை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், “இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்” எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இந்த வன்முறை நிகழ்வின் உண்மையைத் தெரிவித்து,  மிகுந்த கண்ணியத்துடன் தனது கருத்துகளைத் வெளிப்படுத்தியிருப்பதுடன், தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை அதற்குரிய ‘சிந்த்ரெல்லா’ வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கழகமும் செயல்பட்டு வருகிறது.

இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன்.

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்” என தெரிவித்துள்ளார்..

  • க.சீனிவாசன்

வங்கிக் கொள்ளை: 3 பேர் கைது, 18 கிலோ தங்கம் மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel