“திமுகவில் இருப்பவர்கள் ஒரு கட்சிக்காரராக அல்லாமல், கொள்கையின் சொந்தக்காரராக செயல்பட வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் திமுகவின் பொதுக்கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முன்னதாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
இதில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, அவரது மகள் அபிநயா மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இணைந்தனர். இதற்குப் பிறகு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இருக்க வேண்டிய இடத்திற்குத்தான் நீங்கள் வந்துள்ளீர்கள். உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியை என் மனமகிழ்ச்சி பன்மடங்கு உயர்த்திவிட்டது.
இதற்காக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி கூறுகிறேன். இன்று கட்சியைத் தொடங்கியதுமே அடுத்த ஆட்சி நம்முடையது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, கட்சியை தொடங்குவதற்கு முன்னரே நான்தான் முதலமைச்சர் என்கிறார்கள்.
ஆனால், நம்முடைய கட்சி என்பது 1949ல் தொடங்கி, முதல்முறையாக தேர்தல் களத்தில் ஈடுபட்ட ஆண்டு 1952. அது படிப்படியாக வளர்ந்து 1967ல் ஆட்சிக்கு வந்தோம். ஆக, 19 ஆண்டுகள் கழித்து ஆட்சியில் பொறுப்பேற்றோம்.
19 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்திருக்கிறோம். இதுதான் ஆறாவது முறை. இதில் எத்தனையோ தேர்தல் களங்களில் வெற்றி தோல்வியைப் பார்த்திருக்கலாம்.
ஆனால், திமுகவைப்போல வெற்றிபெற்றிருக்கிற ஒரு கட்சி இந்த நாட்டில் ஒன்று இருக்க முடியாது. திமுகவைப்போல் தோற்ற கட்சியும் இந்த நாட்டில் இருக்க முடியாது. இரண்டிலும் திமுகவுக்குத்தான் பெருமை.
திமுக அடையாத புகழுமில்லை. திமுக படாத அவமானங்களும் இல்லை. திமுக செய்யாத சாதனைகளும் இல்லை. அடையாத வேதனைகளும் இல்லை.
இவ்வளவுக்குப் பிறகும் இந்த இயக்கம் 70 ஆண்டுகளைக் கடந்தும் நின்று நிலைத்து நீடித்துக்கொண்டிருக்கிறதென்றால், அதற்கு ஒரே காரணம் திமுக கொள்கைக்காரர்கள் என்பதுதான்.
அந்தக் கொள்கையை காப்பாற்றுவதற்கு உயிரையும் தருவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதும் ஒரு காரணம். தீராத நோய் புற்றுநோய். அதற்கு மருத்துவமே கிடையாது.
எவ்வளவோ சிகிச்சைகள் விஞ்ஞானரீதியாக அதற்கு வருகின்றன. என்றாலும், அது ஒரு தீராத நோய்; கொடிய நோய். அந்த புற்றுநோய்க்கு ஆளாக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா.
அந்த நோய்க்கு அவர் ஆட்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் தமிழகத்திற்கு மகத்தான திட்டங்களைத் தந்தவர் அண்ணா. அதுபோல் தமிழ் சமுதாயத்திற்காக 95 வயதுவரை உழைத்தவர் கலைஞர்.
தங்களுக்காக இல்லாமல், இந்த தமிழ் சமுதாயத்துக்காக உழைத்த அந்த இருபெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்துக்குத்தான் நீங்கள் வந்துள்ளீர்கள்.
திமுக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, ஒரு கொள்கை கோட்டை. இங்கு நீங்கள் கட்சிக்காரராக அல்லாமல், கொள்கையின் சொந்தக்காரராக செயல்பட வேண்டும்.
திராவிடம் என்ற சொல்லுக்குள் நம்முடைய கொள்கைகள் அடங்கியிருக்கிறது. திராவிடம் என்பது சமூக நீதி; சமதர்மம்; மனிதநேயம்; மொழிப்பற்று; இன உரிமை; மாநில சுயாட்சி; கூட்டாட்சி தத்துவம்.
ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமெனில் திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்லக்கூடிய கருத்து. அத்தகைய திராவிட மாடல் ஆட்சி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
பொள்ளாச்சி பொதுக்கூட்டம்: திமுகவில் இணைந்த அதிமுக, பாஜகவினர்!