செந்தில்பாலாஜி என்னிடம் கொடுத்த பட்டியல்: கோவையில் ஸ்டாலின் பேச்சு!

அரசியல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியில் திமுகவின் பொதுக்கூட்டம் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முன்னதாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.

இதில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, அவரது மகள் அபிநயா மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இணைந்தனர்.

இதற்குப் பிறகு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மின் துறை அமைச்சருமான கோவை மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியைப் புகழ்ந்து தள்ளினார்.

“உங்களை எல்லாம் சிந்தாமல், சிதறாமல் திமுக என்ற கூட்டுக்குள் அழைத்துவந்து இந்த மாவட்டத்தின் பெருமையை அதிகப்படுத்தியிருக்கிறார், நம்முடைய மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி.

அவரை நான் மனதார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். செந்தில் பாலாஜி ஒரு செயலில் இறங்குகிறார் என்றால், அது பாராட்டுக்குரிய செயலாகத்தான் அமையும் என நான் பல முறை சொன்னது உண்டு.

தற்போது மேடையில் என் பக்கத்தில் அமர்ந்திருக்கிற கண்ணப்பன் சொன்னார். அவரிடத்தில் யாரும் பாராட்டே வாங்க முடியாது. அது அவருடன் நெருங்கியிருக்கும் அனைவருக்கும் தெரியும்.

அவர் சொன்னார், ‘நீங்கள் சரியான ஆளைத்தான் கோவை மாவட்டத்தில் பொறுப்பாளராகப் போட்டிருக்கிறீர்கள்.

அவரால்தான் இந்த கொங்கு மண்டலத்தில் திமுக கம்பீரமாக வளர்ந்திருக்கிறது’ என்றார். ஆக, ஒரு பணியில் அவர் இறங்குகிறார் என்றால், அது சிறப்பாக அமையும்.

cm mk stalin coimbatore

‘உங்கள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இணைய இருக்கின்றனர். அதற்கு தேதி வேண்டும்’ என்று செந்தில் பாலாஜி என்னிடம் வந்து கேட்டார்.

அதற்கு நான், ‘எவ்வளவு பேர்’ என்று கேட்டேன். ’50 ஆயிரம் பேர்’ என்று சொல்லி என்னிடத்தில் ஒப்புதல் வாங்கினார். நான் அன்று அவரை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.

என்னுடைய பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டு, அன்றைய தினம் இணையக்கூடிய அத்தனை பேரின் பட்டியலையும் என்னிடத்தில் கொடுத்தார்.

அவர்கள் யார், அவர்களுடைய முகவரி, கட்சிப் பதவி, செல்போன் நம்பர் ஆகிய அனைத்தையும் கொடுத்தார். அப்படி அனைத்தையும் ஆதாரமாகக் காட்டித்தான் இந்த தேதியை என்னிடம் பெற்றார்.

எதையும் எப்போதும் வெறுமனே கணக்கு காட்டுவதற்காக அவர் அப்படி சொல்வது கிடையாது. அது, எனக்கு நன்றாகவே தெரியும்.

இன்னும் சொல்லப்போனால் எண்ணிக்கையைவிட, எண்ணம் முக்கியம் என்று நினைக்கக்கூடியவர் நம்முடைய செந்தில்பாலாஜி.

அந்த வகையில் இன்றைய தினம் பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய ஆச்சிப்பட்டியானது, ஆச்சர்யப்பட்டியாக எனக்குக் காட்சியளிக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்

பொள்ளாச்சி பொதுக்கூட்டம்: திமுகவில் இணைந்த அதிமுக, பாஜகவினர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *