பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் திமுக அரசு தான் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.
கொடநாடு கொலை கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “கொடநாடு சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அதிமுக தான்.
என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் தான் நீங்கள் ஈடுபட்டீர்கள். கொடநாடு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக அரசு தான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீங்கள் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தான் வழக்கின் விசாரணை காலதாமதாமாக நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகளை கண்டறிந்து திமுக அரசு அவர்களுக்கு உறுதியாக தண்டனை வழங்கி தரும். கொடநாடு வழக்கில் குற்றவாளி சயான் சிறையில் இருந்து விடுதலை ஆன 29.7.2022 அன்று காலை சிறை அதிகாரிகளிடம் கடந்த அதிமுக ஆட்சியில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று பேசியுள்ளார்.
இந்த வழக்கில் சில உண்மை நிலவரங்களை தெரிவிக்க உள்ளதாகவும் கூறி அவர் அளித்த மனு உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி வழக்கில் புலன் விசாரணை நடத்த அனுமதி கோரி அரசு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் எதிரி சயானை விசாரணை செய்தனர். மேல் விசாரணைக்கு எதிராக அம்மா பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அனுபவ் ரவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தனிப்படை ஏற்கனவே விசாரணை செய்த சாட்சிகள் மற்றும் புதிய சாட்சிகளை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகவும் சாட்சியங்களை மறைத்த காரணத்திற்காகவும் இறந்து போன கனராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை 25.10.2021 அன்று கைது செய்தனர்.
தொடர்ந்து தனிப்படையினர் 306 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு 19.10.2022 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற்றது. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
அந்த சம்பவம் நடந்ததும் உடனடியாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு தடயங்களை காப்பாற்றி வாக்குமூலம் பெறப்பட்டு முறையாக விசாரணை நடத்தியிருந்தால் விரைந்து வழக்கை முடித்திருக்க முடியும்.
ஆண்டுகள் பல ஓடிய காரணத்தினால் சில விஷயங்களை முழுமையாக வெளிக்கொண்டு வர தாமதம் ஏற்படுகிறது.
ஆனாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நடந்த விவகாரம் இது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். இந்த வழக்கில் விரைவில் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் கோலாகலம்!
பல் பிடுங்கிய விவகாரம்: சிசிடிவி கேமரா செயல்படவில்லையா? – ஸ்டாலின் விளக்கம்!