ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை குறிவைத்து தான் முதலமைச்சர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அத்துமீறல்கள் நடைபெறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் மனுவைக் கொடுத்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் இவ்வளவு காலம் ஆய்வு மேற்கொண்டாரா? ஆனால் இப்போது ஏன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு என்ற பெயரில் காவல் அதிகாரிகளை எல்லாம் அழைத்து ஈரோடு சட்டமன்ற தேர்தலுக்கு பணம் கொண்டு செல்லும் எங்கள் ஆட்களை வழி மறிக்காதீர்கள் என்று சொல்கிறார்.
அதேபோல் ஈரோடு சட்டமன்ற தேர்தலில் 40,000 வாக்காளர் இல்லாதவர்களை எல்லாம் வாக்காளர்களாக சேர்த்துள்ளதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.
அதற்கு தற்போது தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த 40 ஆயிரம் வாக்காளர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் அதற்கு இந்த 4 மாவட்டங்களில் இருந்து போலி வாக்காளர்களை தயார் செய்து கள்ளஓட்டு போடுவதற்கு வழிவகையாக அமைவதற்கு தமிழக அரசின் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதையெல்லாம் தாண்டி ஈரோடு கிழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஏடிஎம் கொள்ளையர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி தேடுகிறார்கள்.
சம்பவம் நடந்ததில் இருந்து முதலமைச்சர் அங்குச் சென்று ஆய்வு செய்தாரா? நீதிமன்ற வளாகத்திலேயே கொலை, கொலை, கொள்ளையின் தலைமையிடமாகத் தமிழகம் திகழ்கிறது.
கோடி கோடியாய் கொட்டி போலியான வெற்றியைப் பெற வேண்டும் என்று பார்த்தால் முடியாது. சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை, பால் விலை உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை எல்லாம் மக்கள் நினைத்துப் பார்த்திருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு திமுக அரசுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் அமையும்.
அதிமுக பிரச்சாரத்திற்கு மக்கள் செல்லக் கூடாது என்பதற்காக திமுக இதுவரை 35.64 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். இந்தளவிற்குக் கொள்ளையடித்த பணத்தை வாரி இறைத்து போலியான வெற்றியைப் பெறலாம் என்று திமுக இறங்கியிருக்கிறது.
அதையெல்லாம் தாண்டி திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றாரோ, மருங்காபுரியில் ஜெயலலிதா வெற்றி பெற்றாரோ , அதே போல் ஈரோடு கிழக்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்.
முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொள்வது தவறில்லை. ஆனால் தேர்தல் நடைபெறும் அண்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளாமல் வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளுங்கள்.
எங்களது கோரிக்கை எல்லாம் நியாயமான, சுதந்திரமான, அமைதியான, சட்டத்திற்குட்பட்டு தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே. அந்த கோரிக்கையைத் தான் தேர்தல் ஆணையத்தில் வைத்துள்ளோம்” என்று கூறினார்.
மோனிஷா