தூய்மைப் பணியாளர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று(டிசம்பர் 9) தொடங்கி வைத்தார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, தென்காசி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார்.
நேற்று(டிசம்பர் 8) தென்காசியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று இரவே மதுரை வந்தடைந்தார்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(டிசம்பர் 9)தொடங்கி வைத்தார்.
விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்,
வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார்த்துறை, தனியார் நிறுவனங்கள், தூய்மை பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் பயன் பெறுவார்கள்.
தூய்மை பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து கள ஆய்வு, தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தூய்மை பணிக்கான இயந்திரங்கள் இயக்கத்திறன், தூய்மை பணியாளர்கள் மாற்றுத் தொழில் தொடங்க வங்கி கடன் வசதி ஆகியவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட லோகோவை வெளியிட்டு தூய்மை பணியாளர்களுக்கான காலணிகள், கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
கலை.ரா
மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை சேதம்!
சென்னையில் நாளை ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடக்குமா?