பாஜக எம்.பி. மண்டை உடைப்பு… ராகுல் மீது கொலை முயற்சி புகார்: நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த டிசம்பர் 17ஆம் தேதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் நேற்றும் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டதோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இன்று (டிசம்பர் 19) காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீல நிற உடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தனர். அவர்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து ‘மகர் த்வார்’ என்கிற நுழைவாயில் வரை பேரணி சென்றனர்.

இதில் பிரியங்கா காந்தி, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்துகொண்டு, “அம்பேத்கர் குறித்து பேசியதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மறுபக்கம் பாஜக எம்.பி.க்களும் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள், “காங்கிரஸ் தான் அம்பேத்கரை அவமதித்து வருகிறது” என்று குற்றம்சாட்டினர்.

இந்தநிலையில், நாடாளுமன்ற நான்காவது நுழைவு வாயிலான ‘மகர் த்வார்’ பகுதியில் இரு தரப்பு எம்பி.க்களும் சந்தித்துகொண்டனர்.

அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து பாஜக கூட்டணி எம்.பி.க்களும், பாஜக கூட்டணியை எதிர்த்து இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் இந்த கோஷம், வாக்குவாதமாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளி விட்டதாகவும், அவர் வந்து என் மீது விழுந்ததால் தான் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டுவிட்டதாகவும் பிரதாப் சந்திர சாரங்கி கூறியுள்ளார்.

அடிபட்ட பிரதாப் சந்திர சாரங்கியை பாஜக எம்.பி.க்கள் சூழ்ந்து நின்றுகொண்டிருந்த போது, அவர் அருகே சென்ற ராகுல் காந்தி, ‘என்ன ஆச்சு’ என்றும் விசாரித்தார்.

இதையடுத்து பிரதாப் சந்திர சாரங்கி டெல்லியில் ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போனிலேயே பிரதமர் மோடியிடமும் அவர் பேசினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அர்ஜுன் ராம் மேவால், பியூஸ் கோயல் உள்ளிட்டோரும் சென்றனர்.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்ற நுழைவாயிலில் அவைக்குள் செல்ல நான் முயன்றேன். அப்போது பாஜக எம்.பி.க்கள் என்னை தடுத்து நிறுத்தினர். என்னை தள்ளிவிட்டு மிரட்டினர். அப்போதுதான் இது நடந்தது. மல்லிகார்ஜுன கார்கேவையும் தள்ளிவிட்டனர். நாடாளுமன்றத்துக்குள் செல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறது. அரசியல்சாசனத்தின் மீது தாக்குதல் நடப்பதும், அம்பேத்கரை அவமதிப்பதும் தாம் இங்கு முக்கியமான பிரச்சினை. அதானி விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் எழுப்பி வருகிறோம். முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே இந்த செயல்பாடுகளில் பாஜக இறங்கியிருக்கிறது” என்று பேட்டியளித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில், ஜெய்பீம், ஜெய்பீம் என முழக்கமிட்டவாறு மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்துக்குள் செல்ல முயல்கின்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி தள்ளுமுள்ளு ஏற்படுவது பதிவாகியுள்ளது.

அதுபோன்று, பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் எழுதியுள்ளார். என்னை தள்ளிவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதாப் சந்திர சாரங்கியை தவிர பாஜக எம்.பி முகேஷ் ராஜ்புத்தும் காங்கிரஸ் கட்சியினர் தள்ளியதால் அடிப்பட்டதாக ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் இருவருக்கும் பிபி அதிகமாக இருக்கிறது. இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டதால், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதாப் சாரங்கிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று ஆர்.எம்.எல். மருத்துவமனை மருத்துவர் அஜய் சுக்லா கூறியுள்ளார்.

பாஜகவினர் சொல்வது என்ன?

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால், “தனது வலிமையை காட்ட பாஜக எம்.பி.க்களை தாக்கியது சரியல்ல. பாஜக எம்.பி-ஐ தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இன்றைய நிகழ்வு குறித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜக எம்.பியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள். ஜனநாயகம் துண்டாக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ரவுடித்தனம் செய்கின்றனர். அதற்கு இதுதான் உதாரணம். ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் இதுபோன்று நடந்துகொள்கிறார்கள்.

ராகுல் காந்திக்கு ஒரு பயிற்சி கொடுக்க வேண்டும். அமித் ஷாவின் பேச்சு காங்கிரஸை அம்பலப்படுத்தியது.. இதனால் விரக்தியடைந்துள்ளனர். அவர்களின் போக்கிரித்தனத்தை கண்டிக்கிறோம்” என்று கூறினார்.

பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜக எம்.பி.க்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரதாப் சாரங்கிக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. முகேஷ் ராஜ்புத் தலையிலும் பலமாக அடிபட்டுள்ளது. அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். இன்று நடந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

காங்கிரசார் சொல்வது என்ன?

பிரியங்கா காந்தி கூறுகையில், “கையில் அம்பேத்கர் போட்டோவை வைத்துக்கொண்டு அமைதியான முறையில் நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தி செல்ல முயன்றார். அவரை உள்ளே செல்ல அனுமதியில்லை என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. எதிர்க்கட்சிகள் நாங்கள் பல்வேறு விவகாரங்களுக்காக ஒவ்வொரு நாளும் போராடுகிறோம். குரல் கொடுக்கிறோம். ஆனால் பாஜகவினர் திடீரென இன்று போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?

முதல்முறையாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் போதே இவ்வளவு சம்பவங்கள் நடக்கின்றன. மல்லிகார்ஜுனா கார்கேவை அவர்கள் கீழே தள்ளிவிட்டதில் காயமடைந்தார். அமித்ஷாவை காப்பாற்றுவதற்காகவே இதையெல்லாம் செய்கின்றனர். அம்பேத்கர் அரசியல்சாசனைத்தை உருவாக்கியவர் அவருக்கு அடிப்படை மரியாதையை கூட பாஜகவினர் கொடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் சுக்விந்தர் சிங் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் இன்று பதிவான சிசிடிவு காட்சிகளை வெளியிடுங்கள். என்ன நடந்தது என்று தெரிந்துவிடும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

“தனது பேச்சுக்காக அமித்ஷா மன்னிப்பு கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதற்காக எத்தனை வழக்குகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்.


காங்கிரஸ் எம்.பி.க்கள், சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளனர்.

அதில், “மூன்று பாஜக எம்.பி.க்களால் ராகுல் காந்தி உடல் ரீதியாக தாக்கப்பட்டார். இது எதிர்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை மீறும் வகையில் உள்ளது. பாஜகவினரின் நடத்தை ராகுல் காந்தியின் தனிப்பட்ட கண்ணியத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஜனநாயக சூழலுக்கு எதிரானது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

ராகுல் மீது காவல்துறையில் புகார்


நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் நிலையில், பாஜக எம்.பி.க்களை தள்ளி விட்டதற்காக ராகுல் காந்தி மீது போலீஸில் பாஜக புகார் அளித்துள்ளது.

நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் அனுராக் தலைமையிலான பாஜக எம்.பி.க்கள் குழு, ராகுல் காந்தி மீது பிஎன்எஸ் சட்டம் 109, 115, 117, 125, 131 மற்றும் 351 ஆகிய பிரிவுகளில் புகார் அளித்துள்ளது. இதில் 109 பிரிவு என்பது கொலை முயற்சி புகார் ஆகும்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து விஷயங்களையும் காவல்துறையிடம் கூறியுள்ளோம். ராகுல் காந்தி தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் நாகாலாந்தை சேர்ந்த பெண் எம்பியிடமும் ஆணவத்துடன் நடந்துள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

பாஜகவினர் மீது காங்கிரஸ் புகார்!


பாஜகவினர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலையில், காங்கிரஸும் பாஜகவினர் மீது புகார் அளித்துள்ளது.
“எங்கள் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான மல்லிகார்ஜுன கார்கேவை பாஜகவினர் தள்ளிவிட்டனர். 84 வயதான தலித் தலைவரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று காங்கிரஸ் புகாரில் கூறியுள்ளது.

ராகுல் மீது பாஜக எம்.பி.பகீர் குற்றச்சாட்டு!


இந்த சூழலில் நாகாலாந்து மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.பி., பான்ங்னான் கோன்யான் ராகுல் காந்தி மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“மகர த்வார் பகுதியில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குரலை உயர்த்திக் கொண்டு ஒரு பெண் எம்.பியான என்னருகே மிக நெருக்கமாக வந்தார். அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அப்போது மிகவும் சங்கடமாக உணர்ந்தேன்” என்று ராஜ்ய சபா சேர்மேனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜ்யசபாவிலும் இதை அவர் கூறினார். பாஜக தலைவரும் அமைச்சருமான ஜே.பி. நட்டா, ‘எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் பாயின்ட் ஆஃப் ஆர்டர்’ கொடுத்திருந்த திருச்சி சிவா பேசும்போது, “ராகுல் காந்தி ஒரு சீனியர் நாடாளுமன்ற உறுப்பினர். அவர் அம்பேத்கர், பெண்கள் என எல்லாரையும் மதிப்பவர். இங்கே ஒரு தரப்பினர் ஒரு வெர்ஷனை சொல்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் அந்த இடத்தில் நடைபெறவே இல்லை” என்று உரக்கக் கூறினார்.

அமித்ஷா அம்பேத்கர் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் பாஜக-காங்கிரஸ் இருதரப்புக்கும் இடையேயான மோதல், பரஸ்பர குற்றச்சாட்டு, புகார் ஆகியவை டெல்லியை மட்டுமல்ல நாடு முழுவதும் புயலை கிளப்பியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மக்களை தேடி மருத்துவம்… 2 கோடி பேருக்கு சிகிச்சை… மருந்து பெட்டகம் வழங்கிய ஸ்டாலின்

விஜய் – திரிஷாவை விமான நிலையத்தில் போட்டோ எடுத்தது யார்? – மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share