கடந்த நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நகர சபைக் கூட்டம் திமுக கட்சிக் கூட்டங்கள் போல் நடைபெற்றதாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிராம சபை போல் நகர சபை
உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நவம்பர் 1 ஆம் தேதி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கிராம சபை போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களின் குறைகளைக் கேட்டறியவும் நகர சபையை அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
குறிப்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச் செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து நகர சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
,முதல்முறையாகக் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நகரசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் நகர சபைக் கூட்டம் கட்சிக் கூட்டம் போல் நடைபெற்றதாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் நீதி மய்யம் கண்டனம்
”1996 ஆம் ஆண்டிலிருந்து கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தாலும் அதற்கு இணையான கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சிப் பகுதிகளில் நடத்தப்படவில்லை.
இதனைச் சரிசெய்யும் விதமாக நகரங்களில் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்று 2010-ல் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது (தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் 2010 (திருத்தம்)- எண் 35).
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது என்றாலும், அது அப்போது நடைமுறைக்கு வரவில்லை. ஏட்டளவிலேயே இருந்தது. 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியிலும் இது செயல்படுத்தப்படவில்லை.
கட்சி தொடங்கிய 2018-ம் ஆண்டுமுதல் இச்சட்டத்திருத்தமானது செயல்படுத்தப்படவேண்டும் என்று மநீம தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மநீம தலைமையகத்தில் இதற்காக மாதிரி “ஏரியா சபை” கூட்டம் நடத்தப்பட்டது. தலைவர் கமல்ஹாசன் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
தமிழகமெங்கும் ஆட்சியர்களைச் சந்தித்து மநீம நிர்வாகிகள் இச்சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 24-06-2022 அன்று தமிழக அரசானது இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்தது.
ஒரு வார்டானது பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் “பகுதி சபை” கூட்டங்கள் நடத்தப்படும். வார்டு அளவில் “வார்டு கமிட்டி”க் கூட்டங்கள் நடைபெறும் என்று விதிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தன.
கடந்த 01-11-2022 அன்று தமிழகத்தில் முதன் முறையாகப் பகுதி சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மநீம இதனை வரவேற்று அறிக்கையும் விடுத்திருந்தது. இக்கூட்டங்களானது அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே மநீமவின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு. நடந்தது என்ன ? தலைநகரான சென்னையில் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
கூட்டங்கள் நடத்தப்பட்ட பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் திமுகவின் கட்சிக்கூட்டங்கள் போலவே நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் நேரு, எம்.பி. டி. ஆர். பாலு முன்னிலையில் பள்ளி மாணவரால் திமுக தலைவரின் கவிதை வாசிக்கப்பட்டு அனைவரும் அதை ரசித்துக் கேட்டு மகிழ்ந்தனர்! இது நகரசபையா, இல்லை திமுகவின் நாடக சபையா?
வார்டு கவுன்சிலர் தலைமையேற்று நடத்தவேண்டும் என்ற விதிமுறையானது அப்பட்டமாகக் காற்றில் பறக்கவிடப்பட்டது. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தலைமையில் “குறைதீர் கூட்டங்கள்” போலவே இக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
நிதிநிலை அறிக்கை பெரும்பாலான இடங்களில் வாசிக்கப்படவில்லை. தீர்மானங்கள் முறையாக இயற்றப்படவில்லை என்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகரங்களில் இதுபோன்ற மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கி இருப்பது பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதே.
அடுத்தடுத்த கூட்டங்களில் விதிமுறைகளின்படி இக்கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது. மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை, நகர சபை போன்ற எல்லா வழிமுறைகளுக்கும் ஆதரவாக மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்களின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். கருத்திலும், களத்திலும்” என்று கூறப்பட்டுள்ளது.
மோனிஷா
குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!
சென்னையில் செண்டை மேளம் வாசித்த மம்தா