போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமித்தால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக வாங்கப்படும் மாநகர பேருந்துகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஓட்டுநர் நடத்துநர்களை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகளை போக்குவரத்துதுறை ஆய்வு செய்து வருகிறது.
போக்குவரத்து கழகங்களில் அவுட் சோர்சிங் முறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்களை பணியமர்த்த கூடாது என்று சிஐடியு தொழிற்சங்கம் ஜூன் 6-ஆம் தேதி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை, தொழிலாளர் நலத்துறை, சிஐடியு தொழிற்சங்கம் தரப்பில் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், “போக்குவரத்து என்பது தொழிலாளர்களை மிகவும் சார்ந்து இருக்கக்கூடிய ஒரு தொழிலாகும். 10 வருடங்களாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.
தொழிலாளர்கள் போதாமையினால் சென்னையில் தினமும் 900 பேருந்துகள் இயக்கப்படவில்லை. 3200 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய இடத்தில் 2300 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மாநகர போக்குவரத்து, விரைவு போக்குவரத்து மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் சில பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். இதற்கான ஒப்பந்தபுள்ளியும் கோரினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.
பின்னர் அதனை நிறுத்தி வைத்தார்கள். ஆனால் மறுபடியும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவில் நிர்வாகங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்தில் 512 ஒர்க் ஷாப் டிரைவர் பணியிடங்கள் உள்ளது. இவர்களுடைய பணி டிரைவர்கள் கொண்டு வருகிற பேருந்துகளை பணிமனையில் கொண்டு பார்க் செய்ய வேண்டும் மற்றும் பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப வேண்டும்.
அவர்களுக்கு 8 மணி நேரம் வேலை இருக்காது. அந்த வேலைக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை பணியமர்த்த போகிறோம் என்று போக்குவரத்துதுறை அறிவித்து ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்கள்.
இதன்மூலமாக தற்போது வேலை செய்து வரும் 500 பேருக்கு வேலை போய்விடும். இந்த ஒப்பந்தப்புள்ளியை அனுமதித்தால் டிரைவர், நடத்துனர் பணியிடங்களுக்கும் அவுட் சோர்சிங் முறையில் பணியமர்த்துவார்கள்.
போக்குவரத்து துறையில் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளனர். ஆனால் இது ஒரு வகையான தனியார் மயம் தான்.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தொழிலாளர் நலத்துறையிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும் எங்களுக்கு அதில் முழு நம்பிக்கை வரவில்லை. ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியாளர்களை நியமிக்கும் முடிவை எடுத்தால் வேலைநிறுத்தம் செய்வோம். ஜூன் 9-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்” என்று செளந்தராராஜன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
“தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” – அமெரிக்காவில் ராகுல்
”விசாரணை முடியும் வரை காத்திருங்கள்” : மத்திய அமைச்சர் பேட்டி!