வேலைநிறுத்தம் வாபஸ்… ஆனால்! சாம்சங் நிறுவனத்திற்கு சிஐடியு கண்டிஷன்!

Published On:

| By Selvam

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் (அக்டோபர் 15) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சாம்சங் தொழிலாளர்கள், நிர்வாகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தநிலையில், சாம்சங் போராட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை விளக்கி சிஐடியு சங்க பேரவை கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு சங்க தலைவர் செளந்தரராஜன், “அக்டோபர் 15-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நான்கு அமைச்சர்களும் தொழிலாளர் துறையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் எங்களுடைய கோரிக்கைகளைப் பற்றி கேட்டபோது, நாங்கள் முன்னதாக எழுப்பிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சொன்னோம். அப்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டாமா என்று அமைச்சர்கள் தரப்பு எங்களிடம் கேட்டார்கள்.

அதற்கு, தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வந்து நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவிற்கு சாம்சங் நிர்வாகம் பதிலுரையை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடக்கட்டும். அதில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்ப்போம்.

ஒருவேளை முடிவு எட்டப்படாமல் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும். நீதிமன்றத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இதுதான் சட்டத்தின் வழிமுறை. இதைக்கூட ஒரு நிர்வாகம் எப்படி செய்ய மறுக்க முடியும் என்று எங்களுடைய வாதங்களை வலுவாக வைத்தோம். பின்னர் அமைச்சர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து நிர்வாகம் எங்களுடையை கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.

மேலும், வேலை நிறுத்தம் செய்ததற்காக தொழிலாளர்கள் மீது எந்தவித பழிவாங்கலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினோம். பெரும் தயக்கத்திற்கு பிறகு அதனை ஏற்றுக்கொண்டனர்.

தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது தொழிற்சாலைக்குள் சுமூகமான நிலை இருக்க வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொண்டனர். தொழிலாளர்கள் கட்டுப்பாட்டோடும் ஒழுக்கமாகவும் நடப்பார்கள் என்று உறுதியளித்தோம்.

இதனை அறிவுரையாக தொழிலாளர் துறை அலுவலர் இரண்டு தரப்பிற்கும் சொன்னார். இந்த அறிவுரையை நிர்வாகத்தில் இருந்து வந்தவர்களும், நாங்களும் ஒத்துக்கொள்கிறோம் என்று இருதரப்பும் கையெழுத்து போட்டோம். பின்னர் தொழிலாளர் துறை அலுவலரும் கையெழுத்து போட்டார். முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் உருவான ஒரு ஏற்புடைய அறிவுரை என்று இதற்கு பெயர். கிட்டத்தட்ட ஒப்பந்தத்திற்கு சமம்.

அந்த அடிப்படையில் தொழிலாளர்களுடன் இன்றைய தினம் பேரவைக் கூட்டம் நடத்தினோம். தொழிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தோம். கூட்டத்தின் முடிவில் போராட்டத்தை திரும்ப பெறுவோம் என்ற முடிவை எடுத்துள்ளோம். நாளை முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு!

கடும் மழைக்கிடையே ஆவின் பால் விற்பனை படுஜோர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share