12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டதாக இன்று(மே 1) அறிவித்த முதல்வரின் அறிவிப்பை சிஐடியு தலைவர் சவுந்தராஜன் வரவேற்றுள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், நிறுத்திவைக்கப்பட்டதாக முன்னர் கூறிய 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது என அறிவித்தார்.
இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் தான் அந்த சட்டம் அமைந்திருந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர் சங்கங்களும் அதை ஒன்று சேர்ந்து எதிர்த்தன.

அதன் தொடர்ச்சியாகவே 12 மணி நேர சட்ட மசோதா நிறுத்தப்பட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அரசு எப்போதும் நியாயமான நிபந்தனைகளை மட்டுமே ஏற்க வேண்டும். சீனா உட்பட பல்வேறு நாடுகளிலும் வாரத்தில் 40 மணி நேர வேலை தான் உள்ளது.
இந்த வகையில் தொழிலாளர் தினமான மே தினத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை வாபஸ் பெறப்பட்டது என்ற முதல்வரின் அறிவைப்பை வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்பினரும் முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்
கிறிஸ்டோபர் ஜெமா
12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்: முதல்வர் அறிவிப்பு
ஓட, ஓட பாஜக மாவட்ட தலைவரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினர்