சாம்சங் போராட்டம் முடிவுக்கு வந்தது என்பதை அந்த போராட்டத்தை நடத்தி வந்த சிஐடியு அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் எலக்ட்ரானிஸ் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அரசின் தொடர் பேச்சுவார்த்தை விளைவாக, நேற்று (அக்டோபர் 15) மாலை, வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழிலாளர்கள் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் பணிக்குத் திரும்புவார்கள் என்று பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிய அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
ஆனால் சிஐடியு சார்பில் நேற்று தெளிவான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இன்று (அக்டோபர் 16) சாம்சங் தொழிற்சங்க பேரவையின் பேரவைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்க முடியும் என்று சிஐடியு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 16) காலை சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) தலைவர் இ.முத்துக்குமார் தலைமையில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
நேற்றைய பேச்சுவார்த்தையில் எடுத்த முடிவு சரியானதா, பொருத்தமானதா என்பதனை போராட்ட களத்தில் நேரடியாக பங்கெடுத்திருக்கும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க உறுப்பினர்களின் பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதில், 37 நாட்களாக நடந்து வந்த சாம்சங் போராட்டம் திரும்பப் பெறப்பட்டு, அக்டோபர் 17 முதல் பணிக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.,
முன்னதாக இன்று (அக்டோபர் 17) அதிகாலை சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) தலைவர் இ.முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கையில் சில முக்கிய அம்சங்களை சுட்டிக் காட்டியிருந்தார்.
“நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்திய தொழிற்சங்க சட்டம் 1947, தொழிற் தகராறு சட்டங்கள் வழங்கி இருக்கக்கூடிய சங்கம் அமைத்துக் கொள்கிற உரிமை, தனது அடிப்படையான தேவைகளை அடைவதற்கான கூட்டு பேர உரிமைகள் ஆகியவற்றை அடைவதற்காக காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இளம் தொழிலாளி வர்க்கம் சிஐடியூ தொழிற்சங்கம் தலைமையில் அமைப்பாக திரண்டு நடத்திவரும் போராட்டங்களின் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்த போராட்டமே சாம்சங் தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்த போராட்டமாகும்.
37 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வீரம் செறிந்த இந்த வேலை நிறுத்த போராட்டம் ஒரு கட்டத்தில் தமிழக அமைச்சர் பெருமக்களின் முன்னிலையில் ஒரு நீடித்த பேச்சு வார்த்தையை நோக்கி சென்றது.
தொழிற்சங்கம் அங்கீகாரம் கிடைத்ததா ?
தொழிற்சங்க பதிவை அரசு ஒப்புக்கொண்டதா?
அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதா ?
இந்தப் போராட்டம் வெற்றியா? தோல்வியா ?
என்பது போன்ற பல விவாதங்களும் கேள்விகளும் எங்களுக்கு தொலைபேசி மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் உடனுக்குடன் பரபரப்பாக எங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு இது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் போராட்டம் அல்ல.
போராட்டத்தின் அடிநாதமாக எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் அச்சப்படாமல் சிதறாமல் மலைபோல் உருக்கை போல் எங்கள் போராட்ட குழுவின் உத்தரவுகளை முடிவுகளை ஏற்று செயல்பட்ட சரித்திரம் படைத்த 1350 சாம்சங் தொழிலாளி வர்க்கத்தின் கருத்துக்களே எங்களுக்கு முதன்மையானதும் முடிவானதும் ஆகும்.
எங்கள் போராட்டத்தை முழுமையாக ஒடுக்கும் வகையிலேயே அரசின் பங்களிப்பு இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கிறது. அதேநேரம் பேச்சுவார்த்தையில் ஒரு நல் முடிவு எட்டுவதற்கு அமைச்சர் பெருமக்களின் முயற்சிகள் கடைசி நேரத்தில் உதவிகரமாக இருந்தது என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இன்று எங்கள் பேரவை கூட்ட ஒப்புதலுக்கு பிறகு நாங்கள் பத்திரிகைகள் முன்னால் தெளிவான விளக்கங்களையும் பதில்களையும் தெரிவித்த பிறகு, விரிவான விவாதத்திற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று சாம்சங் இந்தியா சிஐடியு தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
–வேந்தன்