சுள்ளான்கள் எல்லாம் தங்களை தாங்களே எம்ஜிஆர் என்றும், நான் தான் அடுத்து முதல்வர் என்றும் சொல்லி வருகிறார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று (அக்டோபர் 17) இரவு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார்.
அப்போது திருத்தங்கல், கட்டளைப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இன்னைக்கு வந்துட்டு சுள்ளான்கள் எல்லாம் நான் தான் எம்ஜிஆர்-னு சொல்றாங்க, அடுத்த முதல்வர் நான் தான் என்று சொல்கிறார்கள். ஒருகாலமும் அப்படி நடக்காது. இது திராவிட பூமி.
திக, நீதிக்கட்சி, திமுக, அதிமுக… இது தான் இங்கு நிலைமை. நடக்கின்ற போர் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தான். பாஜக, காங்கிரஸ் என யாரும் சீனிலேயே கிடையாது.
புதிதாக வரக்கூடியவர்கள் 30 நாட்களை தாண்ட மாட்டார்கள். அவர்களால் எதிர்ப்புகளை சந்திக்க முடியாது. பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாது” என்று பேசினார்.
அவரது பேச்சு புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜயை மறைமுகமாக சாடியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ள தவெக முதல் மாநாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக போன்று, அதிமுக தரப்பிலும் விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் மட்டும் தான் உழைப்புக்கு மரியாதை!
மேலும் அவர் பேசுகையில், “ஸ்டாலினை வீட்டுக்கும், எடப்பாடி பழனிசாமியை ஆட்சிக்கும் அனுப்ப முடியும் என்றால் அது அதிமுகவால் தான் முடியும்.
கலைஞர், ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி என திமுகவில் ஜனநாயகமே இல்லாமல் வாரிசு பதவிக்கு வரும் மன்னராட்சி நடைமுறை உள்ளது. ஆனால் அதிமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து படிபடியாக உயர்ந்து இன்று கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆக அதிமுகவில் மட்டும் தான் உழைப்புக்கு மரியாதை இருக்கிறது.” என ராஜேந்திர பாலாஜி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா