’’இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆண்டுதோறும் அமைக்கும் கூட்டணி சமுதாயத்துக்குப் பயன்படக்கூடியதாக இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் இன்று (டிசம்பர் 20) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பீட்டர் அல்போன்ஸ், ஐ.லியோனி, ஆயர் நீதிநாதன், பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள், அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், பெர்னாண்டஸ் ரத்தினராஜ், டேவிட் பிரகாசம், முகமது இம்ரானுல்லாஹ் பாகவி, ஜோ அருண், வின்சென்ட் மார் பவுலோஸ், மரிய பிலோமினா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ இவ்விழாவை ஏற்று நடத்தினார்.
இனிகோ இருதயராஜுக்கு புகழாரம்
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எந்த விழாவாக இருந்தாலும் அது, அன்பின் விழாவாக, அனைவரின் விழாவாக அமைய வேண்டும். அந்த வகையில்தான் இவ்விழாவை இனிகோ இருதயராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். காரணம், அவர் இனிகோ இருதயராஜ். 13 ஆண்டுகளாக இந்த விழாவை அவர் சிறப்பாக நடத்தி வருகிறார்.

நாங்கள் எல்லாம் தேர்தலுக்காக 5 ஆண்டுக்கு ஒருமுறைதான் கூட்டணி அமைப்போம். ஆனால், இவர் ஆண்டுதோறும் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு நாட்டுக்குப் பயன்படுவதைப் போன்று இவருடைய கூட்டணி இந்த சமுதாயத்துக்கு பயன்படக்கூடியதாக இருக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க மறுப்பேதும் சொல்லாமல் வருவதற்குக் காரணம், தலைவர் கலைஞர் எப்படி தட்டாமல், கழிக்காமல் ஒவ்வோர் ஆண்டும் வந்தாரோ அதைப் பின்பற்றித்தான் நானும் வந்து கொண்டிருக்கிறேன்.
இந்த அழைப்பிதழில் என்னை ’சமத்துவ நாயகர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இனிகோவும் இவ்விழாவை சமத்துவ விழாவாகத்தான் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் ஆண்டுதோறும் இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பதை என்னுடைய கடமையாகக் கொண்டு பங்கேற்று வருகிறேன்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பொதுவாக அன்பைப் போதிப்பதாக அமைந்துள்ளது. ’உன்மீது நீ அன்பு கூறுவதுபோல், உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக’ என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். இது, மிக எளிமையான வாசகம்தான்.

ஆனால், அதேநேரம் இது வலிமையான வாசகமாகவும் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இந்த அறிவுரையைப் பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தழுவும். சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை இயேசுவின் போதனைகள் திரும்பத்திரும்பக் கூறுகின்றன.
இத்தகைய பண்புகள் தனி மனிதரின் குணங்களாக, சமுதாயத்தின் குணங்களாக, இந்த நாட்டின் குணங்களாக, இந்த உலகத்தின் குணங்களாக மாற வேண்டும். மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்புள்ளம் கொண்டதாக, அரசுகள் இயங்க வேண்டும். திமுக அரசுதான் அப்படித்தான் இயங்கி வருகிறது.
மெய்மறந்துபோன முதல்வர்!
இவையனைத்தையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் அரசு. திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்து வருகிறது. நான் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த அரசின் மூலம் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்னென்ன சாதனைகள் செய்யப்படுள்ளன என்பது குறித்து ஒரு காணொலி காட்சி இனிகோ மூலம் வெளியிடப்பட்டது.
அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பணிகள் செய்திருக்கிறோமா என நானே மெய்மறந்து போனேன். இந்த வீடியோ காட்சியை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்று, அதை மக்களிடம் காண்பிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் இனிகோவிடம் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்காக அல்ல; நமக்காக அல்ல; நம்முடைய சமுதாயத்திற்காக இந்த ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். நாம் ஒற்றுமை உணர்வுடன் ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க பணியாற்ற வேண்டும். பாடுபட வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்