நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள, ’எமர்ஜென்சி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சிரோன்மணி அகாலிதளம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீக்கியர்கள் அதிகம் நிரம்பிய ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் எமர்ஜென்சி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரி போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்றங்களில் சீக்கிய அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ‘எமர்ஜென்சி’ படத்தை பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் திரையிடுவதை தடை செய்வதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கங்கனா ரணாவத் நடிப்பிலும், இயக்கத்திலும் உருவாகியிருக்கும் படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில், அவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் புதுடெல்லியில் பாஜக கட்சியின் அகில இந்திய தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் கங்கனா ரணாவத் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் தன்னிலை விளக்கம் அளித்த அவரிடம் நடைபெறவுள்ள படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு பேசுமாறு அவருக்கு ஜே.பி.நட்டா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘எமர்ஜென்சி’ படத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக, படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் படமான ’எமர்ஜென்சி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவிவருகின்றன. இது உண்மையல்ல. உண்மையில், எங்கள் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது, ஆனால் பல அச்சுறுத்தல்கள் வந்ததால்தான் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் காட்ட வேண்டாம் என்றும், பிந்த்ரன்வாலேவைக் காட்ட வேண்டாம் என்றும், பஞ்சாப் கலவரத்தைகாட்ட வேண்டாம் என்றும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அப்படிச் செய்தால் படத்தில் காட்ட என்ன எஞ்சியிருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த நாட்டின் நிலைமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி படத்தை சீக்கிய அமைப்புகள் எதிர்க்க என்ன காரணம்?
சில வாரங்களுக்கு முன்பு வெளியான எமர்ஜென்சி படத்தின் டிரெய்லரில், வாழ்நாள் முழுவதும் காலிஸ்தான் தனிநாடு கேட்டு போராடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த காலிஸ்தான் இயக்கத்தின் தலைவரான ஜர்னல் சிங் பிந்தரன்வாலே, தனி சீக்கிய மாநிலத்திற்குப் பதிலாக இந்திராவின் அரசியல் கட்சிக்கு வாக்குகளைக் கொண்டுவருவதாக உறுதியளிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
டிரெய்லரில் சீக்கியர்களுக்கு எதிரான காட்சிகள் சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது,
சீக்கிய மக்களை பயங்கரவாதிகளாகவும் பிரிவினைவாதிகளாகவும் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது, உண்மைக்கு அப்பாற்பட்டது’, என்று சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார்.
இதனால்படத்தைத் தடை செய்யக் கோரி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர், மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், சிரோன்மணி பிரபந்த குருத்வாரா பிரபந்தக் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர் பரம்ஜித் சிங் சர்னா, மத்திய சென்சார் போர்டு தலைவருக்கும், ‘எமர்ஜென்சி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிகர்னிகா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், படத்தின் வெளியீட்டைத் தடை செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
’எமர்ஜென்சி’ திரைப்படத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் தெலங்கனா மாநிலத்தில் வெளியிடத் தடை செய்வது குறித்து அம்மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ”படத்தின் சான்றிதழ் பரிசீலனையில் உள்ளது. அது தற்போதுவரை வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி சான்றிதழ் வழங்கப்படும். யாருக்காவது ஏதேனும் குறைகள் இருந்தால், அதை வாரியத்திற்கு அனுப்பலாம். எந்தவொரு படத்திற்கும் சான்றிதழ் வழங்குவதற்கு முன், அனைத்து அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மதம் அல்லது வேறு எந்தக் குழுவின் உணர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யப்படும்’ என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, ’எமர்ஜென்சி’ படத்தின் திரையிடல் சான்றிதழை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தி, தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான திரைப்படங்கள் சமீப வருடங்களாக வெற்றி பெறவில்லை. தோல்வியில் இருந்து மீண்டு வர எமர்ஜென்சி திரைப்படத்தின் வெற்றியை எதிர்நோக்கியிருந்த கங்கனாவுக்கு சீக்கிய சமூகத்தின் எதிர்ப்பு இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எமர்ஜென்சி படத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
– இராமானுஜம்
சென்னையா? சான் பிரான்சிஸ்கோவா? : அமெரிக்க வாழ் தமிழர்களிடம் ஸ்டாலின் பேச்சு!
கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் கஞ்சா… களமிறங்கிய1000 போலீசார்: என்ன நடந்தது?