சிராக் பாஸ்வானுக்கு ஆ.ராசா எச்சரிக்கை!

அரசியல் இந்தியா

பாஜகவுக்கான பி-டீம் அரசியலை தமிழகத்தில் செய்ய வேண்டாம் என்று ஆ.ராசா எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக இணையத்தில் போலி வீடியோக்கள் வைரலானது தொடர்பாக இரு மாநில போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பஸ்வான் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து பேசினார்.

அதுபோன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்து புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக மனு கொடுத்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து பேச முயற்சி செய்தேன். எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. கோவையில் இருந்து பல தொழிலாளர்கள் என்னிடம் தாங்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசினர். இணையத்தில் பரவும் வீடியோக்கள் போலி என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


இந்தசூழலில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.,“பாஜகவுக்கான பி-டீம் அரசியலை ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தமிழ்நாட்டில் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 7) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முற்போக்கு அரசுகள் அமைந்தாலும் சமூகத்தில் வேரூன்றிவிட்ட பழமைவாதத்தாலும் புரட்டுகளாலும் போதிய கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காமல் வடமாநில சகோதர சகோதரிகள் தவிக்கின்றனர்.


தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உருவாக்கிய மாற்றத்தை, மண்டல் எழுச்சி ஏற்படுத்திவிடக் கூடாது என இன்னுமும் சில பிற்போக்குச் சக்திகள் முயன்று வருகின்றன. இதனால், வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை தேடியும் புதுவாழ்வு தேடியும் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் அவர்களது நிம்மதியையும் கெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பா.ஜ.க. செய்வதும், அதற்கு மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களது மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்திற்குரியது.

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக எங்கெங்கோ நடந்த குற்றங்களையெல்லாம், தமிழ்நாட்டில் நடந்ததென போலியான செய்திகளைப் பரப்பி, அதன்மூலம் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கிக் குளிர்காயலாம் என நினைத்த பா.ஜ.க.வின் எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது. பீகாரில் இருந்து தமிழ்நாடு வந்த அரசுக்குழுவும் இங்கு பணிபுரியும் வேற்று மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை என்பதை நேரில் கண்டு உறுதிசெய்திருக்கிறது.

போலிச் செய்தியை திட்டமிட்டு பரப்பியவர்கள் மீது, தமிழ்நாடு காவல்துறையும் பீகார் மாநிலக் காவல்துறையும் வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தாங்கள் காலம்காலமாகச் செய்துவந்த பொய்களைப் பரப்பும் தொழில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்பதால், சிராக் பாஸ்வானை துணைக்கு அழைத்து ஆறுதல் தேடியிருக்கிறார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வலிமையான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும் என்று கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறைகூவல் விடுத்து, அதற்கு அச்சாரமாகத் தனது 70-ஆவது பிறந்தநாள் விழா மேடையையே களமாக மாற்றியதில், கும்பி எரிய இந்தப் பொய்ப் பரப்புரை மேற்கொள்ளப்படுவதை அறியாதவர்கள் அல்ல மக்கள். எனவே, சிராக் பாஸ்வானை வைத்து நடத்தும் நாடகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடையே பா.ஜ.க.வின் விஷமத்தனப் பிரச்சாரத்திற்குத் துணை போக வேண்டாம் என ராம் விலாஸ் பாஸ்வான் மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சமூகநீதிக் கருத்தியலை நெஞ்சில் தாங்கிச் செயல்பட்ட ராம்விலாஸ் பாஸ்வானை, அவருடைய கடைசிக் காலங்களில் பா.ஜ.க. தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதை அவரது மகன் உணர்ந்து, அவர்களது வலையில் வீழாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை யார் ஒருவரும் காலத்தே உணர வேண்டும்.

எனவே, சிராக் பாஸ்வானுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். பா.ஜ.க.வுக்கான பி-டீம் அரசியலை அவர் பீகாரிலேயே செய்யட்டும், தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம்.

திராவிட மாடல் வழியாக 2024-இல் ஒன்றியத்தில் மதச்சார்பற்ற – முற்போக்குச் சக்திகளின் அரசு அமையும். வடமாநிலங்களில் பரவி வரும் பெரியாரிய – அம்பேத்கரிய – மார்க்சிய சிந்தனையும், அது அம்மாநிலத்தில் வாழும் நமது சகோதர – சகோதரிகளிடையே ஏற்படுத்தி வரும் அரசியல் விழிப்புணர்வும் அதற்குக் கட்டியம் கூறுகின்றன.

அப்போது பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் சேர்ந்தே விடியும்! அந்த விடியலில் பொய்களும் பொய்களுக்குத் துணை போகும் போலிகளும் மக்களால் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

பிரதமருக்கு 9 தலைவர்கள் கடிதம்… ஸ்டாலின் மிஸ்ஸிங் ஏன்? 

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் முதல்வருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “சிராக் பாஸ்வானுக்கு ஆ.ராசா எச்சரிக்கை!

  1. ச. வித்தியாதரன் மாநில தலைவர் லோக் ஜனசக்தி கட்சி- தமிழ்நாடு says:

    அறிக்கை
    (திரு A ராஜா அவர்களின் அறிக்கைக்கு பதில்)
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    பாதிக்கப்பட்ட பீகார் மக்களுக்கு ஆறுதல் கூறவும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கொடுக்கவும் சென்னை வந்த எங்களது தேசிய தலைவரை கடுமையான வார்த்தைகளை உபயோகித்துள்ள திரு A ராஜா எம்.பி அவர்களின் அறிக்கை மிகவும் வருத்தத்தை தருவதாக இருக்கிறது
    எங்களது தலைவர் திரு சிராக் பாஸ்வான் எந்த இடத்திலும் தமிழ்நாடு அரசையும் தமிழ்நாட்டின் மக்களையும் குறை கூறவில்லை இருந்தபோதிலும் இவ்வாறு வெறுப்பை உமிழ்வது அதிலும் சமூக நீதிக்கும் அரசியலில் கண்ணியத்தை கற்றுத்தந்த அண்ணா , கலைஞர் மற்றும் அதை கடைப்பிடித்து வரும் தளபதி ஸ்டாலின் அவர்கள் வழியில் வருபவர்கள் இப்படிப் பேசுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.
    திரு சிராக் பாஸ்வான் அவர்கள் கூறியது எல்லாம் பீகார் மக்களுக்கு பாதுகாப்பும் இந்த வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், உண்மை கண்டறியும் குழுவை அனுப்புவதற்கு முன்பே எதுவும் நடக்கவில்லை என்று சொன்னதையும் தான் கூறினார்.
    திரு சிராக் பாஸ்வான் அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முதல்வர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதன் காரணமாகத்தான் கவர்னர் அவர்களை சந்தித்தார் என்பதையும் விளக்கிக் கூறியும் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
    எங்களைப் பொறுத்தவரை இந்த வதந்திகளின் ஊற்றுக்கண் பீகாரில் தான் என்று பத்திரிகைகள் ஊடகங்கள் கூறும்போது பீகார் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பீகார் முதலமைச்சரை பார்த்து இந்த கேள்வியை ஏன் கேட்கவில்லை.
    வதந்திகளை பரப்புவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் தன் மாநிலத்தவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு பாதுகாப்பு, ஆதரவும் தெரிவிக்க வந்தவரை பற்றி அரசியலில் கண்ணியத்தை கற்றுக் கொடுத்த அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் வழியில் பயணப்படுபவர்கள் இவ்வாறு பேசுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது
    எந்த ஆட்சி நடந்தாலும் எதிர்க்கட்சியினர் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர் வழியில் பயணிப்பவர்தான் திரு.சிராக் பாஸ்வான் என்பதும் எல்லாரும் அறிந்ததே.
    யார் யாருடைய B டீம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள காலம் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
    ச. வித்தியாதரன்
    மாநில தலைவர்
    லோக் ஜனசக்தி கட்சி- தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *