சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜின்பிங் நீக்கப்பட்டதாக அந்நாட்டு சமூக தளங்களில் இதுதொடர்பான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 16ம் தேதி உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன.
இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்துகொண்டார். பின்னர், செப்டம்பர் 16ம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஜின்பிங்கை, விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்காரணமாக, 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சீன ராணுவ வாகனங்கள் பெய்ஜிங்கை நோக்கிச் செல்கின்றன என சமூக வலைதளங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
மேலும், சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் நேற்று (செப்டம்பர் 23) பறக்க தடைவிதிக்கப்பட்டதாகவும் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
ஆனால், சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக உலக முன்னணி ஊடகங்களில் இதுவரை எந்த செய்தியும், தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதைக்கொண்டே சீன அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் புரளியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
முன்னதாக, சீனாவின் முன்னாள் சட்ட அமைச்சருக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு, இரண்டு கம்யூனிஸ்ட் உயர் அதிகாரிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து வெளியான ஊடகத் தகவல்களில், சீன அதிபர் ஜின்பிங், தனது கட்சியின் முக்கிய நபர்களை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் மூன்றாவது முறையாக சீனாவில் ஆட்சியைப் பிடிக்க எடுத்திருக்கும் வியூகம் என்று தெரிவித்திருந்தது.
அக்டோபர் 16ஆம் தேதி, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது 20வது கட்சி மாநாட்டை நடத்தவும், இந்த மாநாட்டில், ஜின்பிங் மூன்றாவது முறையாக மீண்டும் அதிபராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் சீன அதிபர் ஜின்பிங் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், செப்டம்பர் 22 முதல் ராணுவ வாகனங்கள் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் வெளியிட்ட வீடியோவில் ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு காட்சிகள் எதுவும் இல்லை.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ’இது வதந்தி’ எனக் குறிப்பிட்டிருப்பதுடன், ’இதைச் சரிபார்க்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். சீனா, எந்த தகவலும் வெளியில் கசியவிடாத ஒரு மர்மமான நாடு. அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்தால்தான் எதையும் நம்ப முடியும்.
ஜெ.பிரகாஷ்
காங்கிரஸ் தலைவர் ரேஸ்: யார் இந்த அசோக் கெலாட்?
கோவை சம்பவம்: உள்துறை செயலாளரிடம் பாஜக புகார்!