இலங்கையில் சீன ராணுவம்: சீமான் எச்சரிக்கை!

அரசியல்

இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து சீன ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சீன உளவு கப்பல் இலங்கை பகுதிக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனிடையே, சீன ராணுவ வீரர்கள் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதால், தமிழக கடலோர காவல் படையினர் விழிப்புடன் இருக்குமாறு மத்திய உளவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (அக்டோபர் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து, மாநில உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

chinese army is dominant in srilanka seeman answer

சீனாவுடன் கூட்டு வைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் இந்திய ஒன்றிய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கைக்குத் துணை நின்றது, அந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்கப் பன்னாட்டு அரங்கில் ஆதரவளிப்பது, இராணுவப் பயிற்சியளிப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர உதவியது என இலங்கையை நெருங்கிய நட்பு நாடாகக் கருதி, அத்தனை உதவிகளையும் இந்திய அரசு செய்துவந்த போதிலும், அந்த நன்றி சிறிதுமின்றி இலங்கை சீனாவுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிராகவே தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவைவிட சீனாவையே முதன்மையான நட்பு நாடாகக் கருதி முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு குறித்து எள்முனை அளவும் கவலையின்றித் தனது துறைமுகங்களை சீனாவிற்குத் தரைவார்த்ததோடு, இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி சீன உளவுக்கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்து இந்தியாவின் முகத்தில் கரியையும் பூசியது.

தற்போது அதைவிடப் பேராபத்தாக சீன இராணுவத்தையே தன் நாட்டிற்குள் அதிகளவில் குவிக்க அனுமதித்து, சீனாவின் ராஜதந்திர சூழ்ச்சிகளுக்குத் துணைபோய் இந்தியாவின் பாதுகாப்யையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழீழ மக்கள் இராணுவமான விடுதலை புலிகள் இயக்கம், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் தலைமையில் ஈழ மண்ணில் நிலைபெற்றிருந்த நாள்வரை, இலங்கைக்குள் எந்த இடத்திலும் சீனாவால் கால் ஊன்றவே முடியவில்லை என்ற உண்மையை இந்திய பெருநாட்டின் ஆட்சியாளர்கள் இப்போதாவது புரிந்து தெளியவேண்டும்.

chinese army is dominant in srilanka seeman answer

ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கத் துணைபோனது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்பதை சமகால அரசியல் சூழல்கள் இந்தியாவிற்கு உணர்த்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் உண்மையான பாதுகாப்பு என்பது ஈழமும், தமிழர்களும்தானே தவிர இலங்கையும், சிங்களர்களும் அல்ல என்பதை இந்திய அரசு இனியாவது உணர்ந்து, இலங்கையை நட்பு நாடு என்று கூறுவதைக் கைவிட வேண்டும்.

எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பகுதியைத் தாக்குவதற்கான ஆயுதப் படைத்தளமாக இலங்கையைப் பயன்படுத்த நினைக்கும் சீனாவின் முயற்சியை இந்தியா முறியடிக்காவிடில் மிகப்பெரிய இழப்பை இந்தியப் பெருநாடு சந்திக்க வேண்டியிருக்குமென முன்கூட்டியே எச்சரிக்கிறேன்.

ஆகவே, இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகும் இலங்கைக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்து, இலங்கை குறித்தான வெளியுறவுக் கொள்கையையும் மாற்ற வேண்டும்.

மேலும், பன்னாட்டு அரங்கில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான அரசு நுட்ப முன்னெடுப்புகளையும் இந்திய அரசு தொடங்க வேண்டும்.

தற்போது இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள சீன இராணுவத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பாதுகாக்க கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்” என சீமான் அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேற்றம்!

நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *