சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை முன் கார்த்தி சிதம்பரம் இன்று (ஜனவரி 2) மீண்டும் ஆஜரானார்.
2009-2014ல் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, சீனாவிலிருந்து இந்தியாவுக்குச் சீன தொழில்நுட்ப நிபுணர்களை அழைத்து வர, 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டன. இதற்காக தற்போதைய சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனிதனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது விழாகாலம், அதனால் என்னை அடிக்கடி அழைப்பார்கள். நான் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல வந்தேன். ED அலுவலகத்தில் இது எனக்கு 20ஆவது நாள்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இன்று (ஜனவரி 2) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம், சீன விசா மோசடி வழக்கில் புதிய சுற்று விசாரணையை தொடங்கியிருப்பதாகவும், பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ம்க்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது தேர்தல் சமயத்தில் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன் பல சம்மன்களுக்கு ஆஜராகி பதிலளித்துள்ளேன். முன்பு என்ன செய்தேனோ அதையே இப்போது செய்கிறேன். இது ஒரு வீண் பயிற்சி” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்!
செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஜாமீன் ரத்து!