சீனப் பொருட்கள் இறக்குமதியை அரசு அனுமதிப்பது ஏன்?: கெஜ்ரிவால்

Published On:

| By Minnambalam

எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்லாம் சரியாகி விட்டது என்று கூறுகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வலியை ஏற்படுத்தும் மிக முக்கியமான பிரச்சினை இது.

சீன ராணுவத்தினருடன் போரிடும்போது பல இந்திய வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். ஆனால் அந்நாட்டிலிருந்து அதிக அளவு இறக்குமதிகளை மத்திய அரச அனுமதிக்கிறது.

இதன் மூலம் மோடி அரசு பெய்ஜிங்குக்கு வெகுமதி வழங்குகிறது. 2020-21ஆம் ஆண்டில் இந்தியா 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களை இறக்குமதி செய்தது. அடுத்த ஆண்டு 95 பில்லியன் டாலர்களாக இறக்குமதியை பாஜக அரசு அனுமதித்தது.

எங்கள் ராணுவ வீரர்கள் மீது உங்களுக்கு மரியாதை இல்லையா? அவர்களின் உயிருக்கு மதிப்பில்லையா? இந்தியா இறக்குமதியை நிறுத்தினால் சீனாவுக்கு அதன் மதிப்பு தெரிய வரும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தைரியமாக செயல்பட வேண்டும்.

சீன தயாரிப்புகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீனப் பொருட்கள் விலை குறைந்தாலும் எங்களுக்கு வேண்டாம். அதிக விலை கொடுத்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

-ராஜ்

கடும் பணி: 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கோர விபத்து!

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு மகுடம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel