அருணாச்சலப் பிரதேசத்தின் 11 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை அறிவித்ததை இந்திய நிராகரித்துள்ளது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகளை சீனா உரிமை கோரி வருகிறது. இதனால் எல்லையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில் அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தும் முயற்சியாக நேற்று 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா வெளியிட்டது. இதில் இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த புதிய பகுதிகள் திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் பகுதியின் கீழ் வருவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
இது போன்று பெயர் மாற்றம் செய்வது முதன்முறை அல்ல. 2017 ஆம் ஆண்டு ஆறு இடங்களின் பெயர்களையும் 2021 ஆம் ஆண்டு 15 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது.
2021 இல் அருணாச்சல பிரதேசத்தில் 15 இடங்களின் பெயரை சீனா மாற்றிய சமயத்தில் இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருந்து வருகிறது. அப்படித்தான் இருக்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பெயர் மாற்றப்பட்டதையும் நிராகரித்துள்ள அரிந்தம் பக்சி,”அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் உண்மையை மாற்றிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 2000 சதுர கிலோமீட்டர் நிலத்தை அபகரித்ததோடு அந்த பகுதிகளின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? என்றும் அவருக்கு ஏன் இந்த அதீத பயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா
கேரளா ரயில் தீ விபத்து: குற்றவாளி கைது!
மதுரை மாநகராட்சி குறித்து செல்லூர் ராஜூ புகார்!