கடுமையாக எச்சரித்த முதல்வர் : மன்னிப்பு கேட்ட அமைச்சர்

அரசியல்

 தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு சிறப்புத் திட்ட செயலாக்கம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை ஏற்கனவே அமைச்சர் மெய்யநாதன் வைத்திருந்தார்.  இப்போது மெய்யநாதனிடம் சுற்றுச் சூழல், மாசுக்கட்டுப்பாடு ஆகிய துறைகள் உள்ளன.

இந்த நிலையில் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் மெய்யநாதனின் அமைச்சர் பதவி தப்பியதே பெரிய விஷயம் என்றும் அவர் முதல்வரின் கடுமையான  எச்சரிக்கைக்குப் பின்னரே அமைச்சரவையில் நீடிக்கிறார் என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
என்ன ஏதென முழுமையாக விசாரணை செய்தோம்… 

சி.வீ மெய்யநாதன் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டார்.  தேர்தல் முடிந்து முடிவுகள்  வருவதற்கான கால இடைவெளியிலேயே  மெய்யநாதன் அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம். முத்துராஜா சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமுதாய பிரதிநிதித்துவ அடிப்படையில்  மெய்யநாதனுக்கு கேபினட்டில் இடம் உண்டு என்று  மின்னம்பலம் கணித்தது. அதன்படியே தேர்தல் முடிவுகள் வந்து அமைச்சரவை பதவியேற்றதும் உறுதியானது.  மெய்யநாதன் சுற்றுச் சூழல், மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகளின் அமைச்சராக்கப்பட்டார். 

ஒன்றிய செயலாளர் பிளஸ் அமைச்சர்
கிட்டத்தட்ட பெரும்பாலான அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் மெய்யநாதன் இன்னும் ஒன்றிய செயலாளராகவே இருக்கிறார். கடந்த உட்கட்சித் தேர்தலில் கூட தனது அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்டச் செயலாளராக பலவித முயற்சிகளை மேற்கொண்டார் மெய்யநாதன். ஆனால் அப்போது அவரால் மாசெ ஆக முடியவில்லை.

மெய்யநாதன் வசம் இருக்கும் சுற்றுச் சூழல், மாசுக்கட்டுப்பாட்டுத் துறை ஆகியவை முக்கியமான துறைகள். பல்வேறு தொழிற்சாலைகளுக்கான  மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி, சுற்றுச் சூழல் க்ளியரன்ஸ் உள்ளிட்டவை மெய்யநாதனின் கைகளில்தான் இருக்கின்றன.  தமிழகத்துக்கு தொழிற்சாலைகள் வருவதும், இங்கே நிம்மதியாக தொழில் செய்வதும் முக்கியமானவை.

முதல்வரிடம் புகார் சொன்ன தொழிலதிபர்கள்!

இந்த சூழலில்தான் கடந்த ஐந்து மாதங்களாகவே முதல்வர் மு.க.ஸ்டாலினை தொழிலதிபர்கள் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது முதல்வரின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். “அமைச்சர் மெய்யநாதன் வயதில் ரொம்ப சின்னவர். தமிழகத்தின் நிலை உணர்ந்து துடிப்பாக செயல்படுவார் என்று நினைத்தோம். ஆனால் இந்தத் துறைக்கு இதற்கு முன் இருந்த அமைச்சர்களை விட மோசமாக நடந்துகொள்கிறார். 

அவரை சந்திக்க முயற்சி செய்தால் முடியவில்லை. நாங்கள் போன் போட்டால் கூட எடுப்பதில்லை.   எங்களை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறார். தொழிற்சாலைகள் சார்பான அதிகாரிகள் சென்று அவரை சந்திக்க முயற்சித்தாலும் பல மணி நேரம் காக்க வைக்கிறார்.  ஃபைலில் இருக்கும் விஷயங்களுக்கு முரணாகப் பேசுகிறார். என்ன இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், ‘நான் சிஎம் சொன்னதைத்தான் செய்கிறேன்’ என்று சொல்கிறார்.  உங்கள் பெயரைப் பயன்படுத்துவதால் தான் உங்களிடமே நேரில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று தொழிலதிபர்கள் முதல்வரிடமே கூறியிருக்கிறார்கள்.

குறிப்பாக ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தினர் முதல்வரிடம், ‘இவரைப் போல இந்தத் துறைக்கு ஒரு மோசமான அமைச்சரை நாங்கள் பார்த்ததே இல்லை’ என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். 
மெய்யநாதனிடம் முதல்வர் நடத்திய விசாரணை!

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் மெய்யநாதனின் செயல்பாடுகளை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். உளவுத்துறையிடமும் இதுகுறித்து கேட்டறிந்தார்.  அப்போது அமைச்சர் மெய்யநாதன் பற்றி தொழிலதிபர்கள்  சொன்னதில் மிகைப்படுத்துதல் எதுவும் இல்லை என்று முதல்வருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து அமைச்சர் மெய்யநாதனை  அழைத்த முதல்வர் ஸ்டாலின்,  ‘என்ன நினைச்சுக்கிட்டிருக்கே… ” என்று கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்திருக்கிறார்.  ‘சின்ன வயசுல அமைச்சராக்கினதுக்கு இப்படிதான் செய்வியா?’ என்று கேட்ட முதல்வர் கிட்டத்தட்ட அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துவிட்டார்.  அதுவரை முதல்வரிடம் இருந்து அப்படிப்பட்ட கோபக் கணைகளை எதிர்கொண்டிராத அமைச்சர் மெய்யநாதன்  அதிர்ந்துபோய் மன்னிப்பு கேட்டுவிட்டு ஆடிப் போய் வெளியே வந்திருக்கிறார்.

காப்பாற்றிய முத்துராஜா சமுதாயம்

கோபம் குறையாத முதல்வர் ஸ்டாலின்  அமைச்சர் மெய்யநாதனை அமைச்சரவையில் இருந்தே நீக்குவது பற்றியும் ஆலோசனையைத் தொடங்கினார். அப்போதுதான், “மெய்யநாதன் முத்துராஜா சமுதாயத்தைச் சேர்ந்தவர்.  அவரை நீக்கினால் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். திருச்சி, கரூர் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில்  அமைச்சர்கள் இருப்பதால் அந்த பிரதிநிதித்துவத்தை கொடுப்பது நடைமுறை சாத்தியம்  இல்லை” என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் மெய்யநாதன்  அமைச்சரவையில் நீடிக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஸ்டாலின்.


இதேநேரம்  அமைச்சர் மெய்யநாதன் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே  திமுகவின் பல சீனியர்களையும், முதல்வரின் குடும்ப உறுப்பினர்களையும் நேரடியாக சந்தித்து, ‘எப்படியாவது  தலைவர்கிட்ட சொல்லி என் அமைச்சர் பதவியை காப்பாத்துங்க’ என்று படையெடுத்திருக்கிறார். ஆனால் அவரது முத்துராஜா சமுதாயம்தான் மெய்யநாதனின் அமைச்சர் பதவியைக் காப்பாற்றியிருக்கிறது.

தனது பதவிக்கு இப்போதைக்கு வந்த ஆபத்து நீங்கியதை உணர்ந்த அமைச்சர் மெய்யநாதன் தொழிலதிபர்களைத் தொடர்புகொண்டு,  ‘என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? உங்களை அவமதிக்கணும்னெல்லாம் நான் திட்டமிட்டு எதுவும் பண்ணலைங்க. இனிமே  அதுமாதிரி எதுவும் நடக்காதுங்க’ என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல தனது செயல்பாடுகள் மூலம் முதல்வரை கூல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படியே செயல்படத் தொடங்கியுள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.

வேந்தன்

பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர்: மக்களவையில் நிறைவேறிய மசோதா!

கள்ளக்குறிச்சி மாணவி செல்போன்: காவல்துறையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *