Chief Minister Stalin thanked the Governor

“ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை” – ஆளுநருக்கு சூசகமாக பதிலளித்த முதல்வர்!

அரசியல்

ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் பேசியிருக்கிறார்.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் உரையாற்றினார்.

அதில், பேரவைத் தலைவருக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் கூறி, எனது உரையை நான் தொடங்குகிறேன்.

தாய்த் தமிழ்நாட்டைக் காக்க ஒப்படைத்துக் கொண்டு தூங்காமை, கல்வி, துணிவுடமை ஆகிய மூன்றையும் முறைமேற்கொண்டு முறைசெய்து வெல்லும் திராவிட மாடல் ஆட்சியானது நடைபெற்று வரும் வேளையில் மகிழ்ச்சியான மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நிற்கிறேன்.

சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியத் துணைக்கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.

தந்தை பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர், இவர்களது கொள்கைகளையும், இலட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திராவிட மாடல் ஆட்சி.

20 மாதங்களைக் கடந்திருக்கிறது கழக அரசு. அதற்குள் இமாலய சாதனைகளைச் செய்திருக்கிறோம். நாம் கடந்துள்ள காலம் குறைவுதான். ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். அதேநேரத்தில், இந்த இருபது மாத காலம் போனதே தெரியவில்லை.

இலக்கினை அடைவதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நம்முடைய சிந்தையில் நின்றது; அதுவே மக்களின் மனதை வென்றது.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பலம் வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ, அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் ‘திராவிட மாடல்’ கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது.

செயல்பட்டு வருகிறது என்பதை விட, திராவிட மாடல் ஆட்சியானது வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் சரியானதாகும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம்.

தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று விரும்பினோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

Chief Minister Stalin thanked the Governor

பொருளாதாரம் , கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி. அதுதான் தமிழ்நாடு காணும் தனித்துவமான வளர்ச்சி.

அத்தகைய திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது ஒரு சரித்திரப் பயணமாக ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

கடந்த 9 ஆம் தேதியன்று ஆளுநர் இந்த மாமன்றத்தில் ஆண்டின் தொடக்கத்துக்கான உரையை ஆற்றினார். தமிழ்நாடு அரசின் பன்முகக் கூறுகளை விளக்கியும், தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மாமன்றத்துக்கு ஆற்றினார்.

அன்றையதினம் நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும்,

நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும் என்னை இச்சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்ப் பெருமக்களும் நன்கு அறிவார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ?
முயர்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ ?
உயிருக்கு நிகர் இந்த நாடு அல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ?

என்ற திராவிட இயக்கக் கவிஞர் முத்துக்கூத்தன் அவர்களின் கவிதையை நாம் என்றும் நினைவில் கொண்டு, பெருமித நடைபோடுவோம்.

ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் இம்மாமன்றத்துக்கு வருகை தந்து உரையாற்றிய மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அரசின் சார்பிலான நன்றியை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதற்காக அவர்கள் பாராட்டி வருகிறார்கள்.

‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’ என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதினார். அதேபோலத்தான் நாங்கள் வேகமாகவும், அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம்.

‘நான்’ என்று சொல்லும் போது என்னை மட்டுமல்ல அமைச்சரவையை மட்டுமல்ல, நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன் என்றார்.

கலை.ரா

316 துணை மின் நிலையங்கள்: செந்தில் பாலாஜி!

பாஜக பிரமுகர் நீக்கம்: அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *