மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், சென்னையில் முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (அக்டோபர் 16) சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ரேஸ் கோர்ஸ் நிலம் அரசின் வசம் வந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் குளம் அமைக்கும் பணி, நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்து பள்ளிக்கரணை சென்ற முதல்வர் ஸ்டாலின் நாராயணபுரம் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும், ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன. நீங்கள் மக்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம். கடந்த மூன்று மாதங்களாகவே மழை வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைத்து ஆட்சிக்கு வந்தபோதே இதற்கான பணிகளில் இறங்கினோம்.
கொஞ்சம் கொஞ்சமாக பணிகளை செய்து வருகிறோம். ஒரேயடியாக எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஆனால் நிச்சயமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். முன்களப்பணியாளர்கள் அத்தனை பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
மன்னரான அஜய் ஜடேஜா: உயர்ந்த சொத்து மதிப்பு!
ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பு!