மதுரையில் மழைநீரை அகற்றும்பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வரலாறு காணாத மழை பெய்ததால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை மழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்ஆகியோரை அனுப்பி வைத்தேன்.
குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க இராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.
மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று (அக்டோபர் 26) அண்ணா அறிவாலயத்துக்கு சென்று, பின் மீண்டும் கார் ஏற வந்தபோது அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் முதல்வர் ஸ்டாலினை அழைத்து மதுரை வெள்ளம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் வந்த முதல்வர் ஸ்டாலின், “நேற்று 8 செ.மீ மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீர் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டது. உள்ளூரில் உள்ள இரண்டு அமைச்சர்கள் முகாமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
8 ஏரியாவில் தான் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறொன்றும் பிரச்சினை கிடையாது. மீண்டும் மழை வரும் என்று எதிர்பார்க்கிறோம். முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எல்லா ஊர்களிலும் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பொருளை இறக்க 25 ஆயிரம்… நோக்கு கூலியால் நாக்கு தள்ளிய காண்டிரக்டர்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திமுக கூட்டணி தலைவர்கள் : ஏன்?