சேலத்தில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 13) திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கூட்டுரோடு பகுதியில் 1102.25 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.564.44 கோடி செலவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் கட்டடம். நுழைவு வாயில் வளைவுகள். விருந்தினர் விடுதி, வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதி என மொத்தம் 126 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 13) திறந்து வைத்தார்.
இந்த கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உயிர் தொழில்நுட்ப பிரிவுகள், கால்நடை இனப் பெருக்கம் மற்றும் தொழில்நுட்ப பிரிவுடன் கூடிய ஆராய்ச்சி வளாகம், தொழில் துவக்கம் மற்றும் ஒருங்கிணைந்த தகவல் மைய வளாகம். பசுந் தீவன ஆராய்ச்சி வளாகம், பொதுமக்கள் கலந்துரையாடும் பகுதி, இறைச்சிக்கூடம் மற்றும் பதப்படுத்துதல் வளாகம் ஆகிய வளாகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டமைப்பு பணிகள் நபார்டு தேசிய வேளாண் வளர்ச்சி வங்கி மூலம் 447.05 கோடி ரூபாய் கடனுதவி பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கென தேவையான கால்நடைகள், உபகரணங்கள். மருந்து பொருட்கள் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
28.50 கோடி ரூபாய் செலவில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் தேவைக்கான குடிநீரை வழங்க 262.16 கோடி ரூபாய் செலவில் சிறப்பு குடிநீர் வழங்கல் திட்டம். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றிலிருந்து சேலம் மாவட்டம் கூடக்கல் கிராமத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு பல்வேறு நீரேற்று நிலையங்கள் மூலமாக 156 கி.மீ தூரத்திற்கு குழாய்கள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சுமார் 70 உயர்தர நாட்டின பசுக்கள். 500-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு குட்டிகள், 500 வெண்பன்றி குட்டிகள். 20 லட்சம் நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தின் மூலம் கால்நடைப் பண்ணைகள் சார்ந்த தொழிலினை தொடங்க விழையும் தொழில் முனைவோருக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பயிற்சி பெற வாய்ப்புகள் அமையும்.
ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஆண்டுதோறும் 3,000 இளைஞர்கள் பயிற்சி பெற்று சிறந்த வேலைவாய்ப்பினை ஏற்படுத்திகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு கடந்த 2021ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தை தனது கனவுத் திட்டம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவை திறக்க வேண்டும் என்று தொடர்ந்து திமுக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தார்.
இன்று எடப்பாடியின் கனவுத் திட்டத்தையும், கோரிக்கையையும் ஸ்டாலின் ஒரு வழியாக நிறைவேற்றியிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அரிவாளை கையில் தூக்கிய நடிகர் வேலராமமூர்த்தி மனைவி!
’பாஜகவின் கருத்துகளை தான் சீமான் பேசுகிறார்’ : தமிழிசை தடாலடி!