சட்டமன்றத்தை ஆளுநர் அரசியலுக்காக பயன்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 15) பதிலுரை வழங்கினார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் அரசியல்!
அப்போது அவர், “ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை.
ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.
இது, எங்களை அல்ல; நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா?
மக்களாட்சி மாண்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?
எங்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். “தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு” என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன்…”
நான் ஸ்டாலின் அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பாசிசத்தை – எதேச்சதிகாரத்தை – இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுச் செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம்.
போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்” என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்.
தமிழ்நாட்டின் சாதனைகள்
என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை “முன்னேற்ற மாதங்கள்!” “சாதனை மாதங்கள்”
இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இது, இரண்டாவது சாதனை.
ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை.
இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! இது, நான்காவது சாதனை.
ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை.
தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! இது, ஏழாவது சாதனை.
கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது இந்த ஆட்சியின் எட்டாவது சாதனை.
புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை.
இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை.
இந்தப் பத்து மட்டுமல்ல, இந்தியாவின் தென் மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது; அதன் திட்டங்களைத் தெரிந்து வந்து நம் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்துச் செல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனை. இப்படி, இன்று முழுவதும் என்னால் பட்டியலிட்டுக் கொண்டே இருக்க முடியும், ஆனால், நேரம் போதாது.
நமது ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ந்து வருவதைப் பார்த்து நம் இன எதிரிகளுக்கு பொறாமையும் கோபமும் வருகிறது அல்லவா? அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மாபெரும் சாதனை என்பதை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்” என கூறினார்.
அரசின் திட்டங்கள்
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு முறை நான் கையெழுத்து போடும் போதும், இதனால் பயன்பெறப்போகும் லட்சக்கணக்கான மக்களின் முகங்களைப் பார்க்கிறேன். சில திட்டங்களின் பெயரைச் சொல்லி, இதன் மூலமாக எத்தனை லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று எனது செயலாளர்களிடம் கேட்டேன். அவர்களின் பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”யாக ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பெறுகிறார்கள்.
“விடியல்” பேருந்து பயணத் திட்டம் மூலமாக 445 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஒரு கோடி பேர்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள் வயிறார உணவு உண்கிறார்கள்.
நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர்.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 1 லட்சம் பேர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் “புதுமைப் பெண்” திட்டப்படி 2 ஆண்டுகளுக்கு,
4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள்.
‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிப் பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள்.
62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளது. 2 லட்சம் உழவர்கள் புதிய மின் இணைப்பு பெற்றுள்ளார்கள். உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம் முதியோர் மாதந்தோறும் பெறுகிறார்கள்.
உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் பெறுகிறார்கள்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் பயனடைந்தவர்கள் 42 லட்சத்து 33 ஆயிரம் பேர்.
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு தொகை உயர்ந்த பிறகு பயன்பெற்றவர்கள் 20 லட்சத்து 55 ஆயிரம் பேர்.
மீன்பிடி கால உதவித்தொகை பெற்றவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரம் பேர். மீன்பிடி இல்லாதகால உதவித்தொகை பெற்றவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர். Stalin accused the governor in assembly
‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் பயனடைந்தவர்கள் 2 லட்சம் பேர். ‘முதல்வரின் முகவரி திட்ட’த்தினால் பயனடைந்தவர்கள் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர்.
‘மக்களுடன் முதல்வர் திட்ட’த்தின் மூலமாக, 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 45 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் மற்றும் ஆயிரம் என நிவாரணத் தொகை வழங்கி இருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இந்த 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 6 ஆயிரத்து 569 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளேன்” என்று பட்டியலிட்டார்.
“மகளிருக்கு உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டத்தின் மூலமாக பெண்ணினத்தின் பொருளாதார-சமூக நிலை உயர்கிறது. தன்னம்பிக்கையையும்,
தற்சார்பு நிலையையும் அவர்கள் அடைகிறார்கள். பெண்களின் சமூகப் பங்களிப்பு 40 விழுக்காட்டில் இருந்து 65 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. Stalin accused the governor in assembly
உயர்கல்வி பெற வரும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு உதவித்தொகை தருவதன் மூலமாக 34 விழுக்காடு மாணவிகள் அதிகமாக கல்லூரிகளை நோக்கி வந்துள்ளார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக, உயர் நிறுவன வேலைகளில் சேர்வதற்கு இளைஞர்கள் தகுதி பெற்று விட்டார்கள்.
பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா போட்டிகளை நடத்தியதன் மூலமாக விளையாட்டு ஆர்வம் அதிகமாகி விட்டது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட்டு வருவதன் மூலமாக கர்ப்பக்கிரகத்தில் சமத்துவம் நுழையத் தொடங்கி விட்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதையும் உள்ளடக்கி ‘எல்லார்க்கும் எல்லாம்‘ என்ற ‘திராவிட மாடல்’ கொள்கையை உருவாக்கி, அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியானது செயல்பட்டு வருகிறது.
அதனால்தான் இந்தியாவின் முன்னணி பத்திரிக்கைகள் மட்டுமல்ல, உலகளாவிய பத்திரிக்கைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களது பாராட்டை பெறும் அரசாக கழக அரசு இயங்கி வருகிறது” என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.
மேலும் அவர், “மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதலமைச்சர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம்.
நாம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களைச் சந்தித்தோம். அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை.
30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களைத் தருவதில்லை. தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை” எனவும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“இணைந்து குரல் கொடுப்போம்”: எடப்பாடிக்கு ஸ்டாலின் அழைப்பு!
மூடப்படும் திரையரங்கம்… நினைவுகளை பகிர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் வருத்தம்!
Stalin accused the governor in assembly