முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் : புறப்படும் முன் சொன்னது என்ன?

Published On:

| By Kavi

Stalin went to Spain to attract investments

Stalin went to Spain to attract investments

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று (ஜனவரி 27) ஸ்பெயின் புறப்பட்டார்.

இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர்,  “திராவிட மாடல் அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று பயண நாட்கள் தவிர்த்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்.

என்னுடைய கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை. 2022ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதேபோல, 2023ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்  1,342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த இரண்டு பயணங்கள் மூலமாக, 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல்வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள். தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை நிறுவ தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால். புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டே மாதங்களில், ஓம்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிடாலேண்டு நிறுவனத்தின் ஐ.டி. பூங்கா-வை சமீபத்தில் தொடங்கி வைத்தேன்.

ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், லூலூ பன்னாட்டுக் குழுமம், கோயம்புத்தூரில் தன்னுடைய திட்டத்தை துவங்கியிருக்கிறது.

ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்றே, ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில் முனைவோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.

இந்த பயணத்தின்போது, ரோகா (ROCA) மற்றும் கெஸ்டாம்ப், உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், இன்வெஸ்ட் ஸ்பெயின் எனும் முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த பயணத்தின் மூலமாக, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், பெரிய நிறுவனம் ஏதாவது வர வாய்ப்பு இருக்கிறதா. எவ்வளவு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு, “நான் பயணம் முடித்துவிட்டு வந்த பிறகு விளக்கமாக சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

காந்தியை அவமதிக்கவில்லை : ஆளுநர் ரவி விளக்கம்!

பிரமாண்ட பட்ஜெட்: ‘கர்ணனாக’ களமிறங்கும் சூர்யா… ஹீரோயின் யாருன்னு பாருங்க!

Stalin went to Spain to attract investments

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share