தமிழக சட்டமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் என்பது, இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஓர் முன்னுதாரணம் என்று தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று(ஜனவரி 11) தெரிவித்தார்.
இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் பேசும்போது, “அன்று ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையில் பல பத்திகள் வாசிக்கப்படவில்லை, பல பத்திகள் சேர்க்கப்பட்டன.
இதுகுறித்து உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது முதல்வர் திரும்பி உறுப்பினர்களை அமைதிப்படுத்தி சபையின் மாண்புக்கு சிறு இடையூறு கூட வந்துவிடக்கூடாது என்பதற்காக அமைதி காத்தார்.
அதன் பின் என்னிடம் ஓர் அனுமதியைக் கேட்டு, பேரவை விதி 17ஐதளர்த்தி, அமைச்சரவை கூடி முடிவு செய்து தயாரித்து ஆளுனருக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் கொடுத்து அனுப்பிய உரையை அவையில் பதிவு செய்வதற்கு கண்ணியத்தோடு அனுமதி கேட்டார்கள்.
நான் அந்த வாய்ப்பைக் கொடுத்தேன். பேரவையில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவையில் இருந்தவர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு அதன் பிறகுதான் அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது.
அன்று அசாதாரண சூழலை ஏற்படுத்தியது அரசல்ல, இந்த அவையல்ல. ஆளுநர் பேசும்போது ஏற்பட்டுவிட்டது. ஓர் அசாதாரண சூழல் ஏற்பட்டது.
ஆனால் அப்போது முதல்வரின் மதி நுட்பத்தால் கொண்டுவந்த தீர்மானத்தால் நம் சட்டமன்றத்தின் மாண்பு மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநில சட்டமன்றங்களின் மாண்பும் காப்பாற்றப்பட்டது.
மறைந்த முதல்வர் கலைஞர் எவ்வாறு சுதந்திர தினத்தன்று கொடியேற்ற மாநில முதல்வர்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறாரோ, அதேபோல சட்டமன்றத்தில் ஆளுநரின் வரம்பு என்ன என்பதை இந்தத் தீர்மானத்தின் மூலம் முதலமைச்சர் வரையறுத்துள்ளார்.
இந்த சட்டமன்றம் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து சட்டமன்றங்களின் மாண்பும் முதல்வரின் தீர்மானத்தால் காப்பாற்றப்பட்டுவிட்டது.
முதல்வர் கொண்டுவந்த தீர்மானம்தான் இன்று இந்திய அளவில் பேசப்படுகிற பொருளாக இருக்கிறது” என்று பேசினார் சபாநாயகர் அப்பாவு.
–வேந்தன்
“பெரிய பதவிக்கு அடிபோடுகிறார் சபாநாயகர்”: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா வாரிசு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
பெரிய டுபாக்கூர்