தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் (ஆகஸ்ட் 11) தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மூட அரசியல்தனத்தை அடக்குவோம்’ என்று தலைப்பிட்டு எழுதிய கடிதத்துக்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இன்று(ஆகஸ்ட் 15) பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர், தொண்டர்களுக்கு நேற்று (ஆகஸ்ட் 14) எழுதிய கடிதத்தில், ”மதுரை விமான நிலையப் பகுதியில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தில், தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது.
தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது.
ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கட்சியும் செயல்பட்டு வருகிறது.
இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம்.
தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்” என அதில் தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தங்கள் (ஸ்டாலின்) நாடக அரசியலின் அடுத்த தேசபக்தி ஸ்டிக்கர் ஒட்டும் காட்சியை நானும், தமிழக மக்களும் அறிந்துகொண்டோம்.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு தங்கள் தகுதி நன்றாகத் தெரியும். தாங்கள் தேசியத்தை வெறுப்பவர்கள். போலி திராவிடத்தை தூக்கிப் பிடிப்பவர்கள்.
எப்போதெல்லாம் உங்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறதோ, அப்போதெல்லாம் உங்கள் தனி திராவிட நாடு கோரிக்கையை கையில் எடுப்பீர்கள்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தேசியத்துக்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டவுடன், தங்களுக்கு தேள் கொட்டியதுபோல் ஆகிவிட்டது.
அதனால் சுதந்திர தினத்தைக்கூட சுதந்திரமாகக் கொண்டாடவிடாமல், உங்கள் அடக்குமுறை அரசியலை வெளிப்படுத்துகிறீர்கள். மறைந்த வீரர் லட்சுமணன், திமுகவுக்காக போராடி உயிரிழக்கவில்லை. இந்த நாட்டுக்காக போராடி வீர மரணம் எய்தியிருக்கிறார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. இதில் மலிவான அரசியல் செய்தவர் யார் என்பதை தமிழ் நாடு அறியும்” எனக் குறிப்பிட்டிருக்கும் அண்ணாமலை, ”50 ஆண்டுக்கால ஆட்சியில் இருந்த தங்கள் கட்சி, இதுவரை எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சிலை வைத்திருக்கிறீர்கள்? எத்தனை முறை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை உச்சரித்திருக்கிறீர்கள்’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், “மூட அரசியல்தனத்தை சட்டப்படி அடக்குவோம் என்று முழங்கி இருக்கிறீர்கள். உங்கள் அடக்குமுறையை கண்டு நாங்கள் யாரும் அஞ்சப்போவதில்லை. நாட்டின் இறையாண்மைக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக எவர் புறப்பட்டாலும், எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் தயாராக இருக்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் நானும், என் மூத்த தலைவர்களும் இருக்கிறோம் என்கிற உண்மையை தயவுசெய்து மறந்துவிட வேண்டாம்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மீண்டும் சர்ச்சை : கோபுரத்தின் மீது ஏறி கொடியேற்றிய பாஜகவினர்!