சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) காலை மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்குப் பிறகு, 2018 ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5 ஆம் ஆண்டு இன்று தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் மூத்த அமைச்சர்களும் சென்று மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின்.
5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அவர், “தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் – நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்!” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மோனிஷா
எம்.பி.யை மதிக்காத மாவட்டம் – எகிறிய ஸ்டாலின்: சேலத்தில் நடப்பது என்ன?