வைஃபை ஆன் செய்ததும் கள்ளக்குறிச்சியில் இருந்து நமது நிருபர் அனுப்பிய கள்ளச்சாராய மரணங்களின் உலுக்கும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கள்ளக்குறிச்சி நகரத்தின் மையத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்து சுமார் நாற்பது பேர் வரை ஜூன் 20 இரவு நிலவரப்படி இறந்துபோய்விட்டார்கள். கள்ளக்குறிச்சி மருத்துவமனை, சேலம் மருத்துவமனை. ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளிலும் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தின் முதல் மரணம் பற்றிய தகவலை குறித்த நேரத்தில் மேலிடத்துக்கு அனுப்பியிருந்தால், நிர்வாக ரீதியான, மருத்துவ சிகிச்சை ரீதியான நடவடிக்கைகளை ஒரு நாள் முன்னதாகவே மேற்கொண்டிருக்கலாம் என்று முதலமைச்சர் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மின்னம்பலத்திடம் பேசிய கண்ணன் என்பவர், ‘என் சகோதரி மகள் சுரேஷ் ஜூன் 19 ஆம் தேதி காலையில 6.10 மணிக்கு இறந்திருக்காரு. அவர் முதல் நாளும் சாராயம் சாப்பிட்டிருக்காரு, அன்னிக்கு விடிகாலையிலயும் சாப்பிட்டிருக்காரு. கள்ளக்குறிச்சி காய் கறி மார்க்கெட்ல டீ கடை பக்கத்துல துடிச்சிருக்காரு. அக்கம் பக்கத்துல வேலை செஞ்சவங்க அவரை ஆம்புலன்ஸ் பிடிச்சு கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிருக்காங்க. அங்க காலையில 6.10க்கே இறந்துட்டாரு. நாங்க காலையில எட்டு மணிக்கு போனோம். அப்புறம்தான் போலீசுக்கே இவர் பேர் சுரேஷ்னு தெரியும்னு சொன்னாங்க’ என்றார்.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே பள்ளி மாணவி மரண விவகாரத்திலும் உளவுத்துறை தகவல் தொடர்பில் தோல்வி என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் ஜூன் 19 ஆம் தேதி காலை 6.10 மணிக்கே கள்ளச்சாராயத்தால் முதல் மரணம் நிகழ்ந்திருந்தாலும் எஸ்.பி இன்ஸ்பெக்டர் சண்முகம் இதுகுறித்து உடனடியாக முறையாக எஸ்.பி.க்கும் அதன் வழியாக காவல்துறை மேலிடத்துக்கும் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் நேற்றே தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கலாம்.
ஆனால் கள்ளச்சாராய சாவுகளை முதலில் மூடி மறைக்க முயற்சி நடந்திருக்கிறது. எஸ்.பி.இன்ஸ்பெக்டரின் தவறான தகவலின் அடிப்படையிலேயே கலெக்டரும் இது கள்ளச்சாராய சாவு அல்ல என்று முதலில் தெரிவித்தார். பிறகு இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. நேற்று மாலைதான் கலெக்டர் மாற்றப்பட்டு, எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் எஸ்பி இன்ஸ்பெக்டர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.
கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட முதல் மரணத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகள்தான், இந்த விவகாரத்தில் அரசு இயந்திரத்தின் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக் போட்டுவிட்டது. இதெல்லாம் முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டன.
மேலும் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக ஆகியவை ஆர்பாட்டம் அறிவித்த நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விசிகவும் முழுமையான மதுவிலக்கு, கள்ளச்சாராய விவகாரத்தில் காரணமான அதிகார வர்க்கத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 24 ஆம் தேதி ஆர்பாட்டம் அறிவித்துள்ளது.
நிர்வாக ரீதியான நெருக்கடி, அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் தரும் நெருக்கடி, கூட்டணிக் கட்சிகள் தரும் நெருக்கடி என மூன்று நெருக்கடிகள் முதல்வர் ஸ்டாலினைச் சூழ்ந்துள்ளன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளச்சாராய மரணம்: விசிக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்!
இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு