தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார் என்று கடந்த மே 13ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
மின்னம்பலத்தின் இந்த செய்தியை கடந்த ஜூன் 28ஆம் தேதி சட்டமன்றத்தில் உரையாற்றிய தொழில்துறை அமைச்சர் டி ஆர்.பி.ராஜா உறுதிப்படுத்தினார்.
“வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்த்து வருவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இதன் அடுத்த கட்டமாக அமெரிக்காவில் பெருநிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்” என தெரிவித்திருந்தார் அமைச்சர் டி.ஆர்பி.ராஜா.
சமீப நாட்களாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றி விட்டு அதன் பிறகு அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது,
“வருகிற ஜூலை 28ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார். இரண்டு வார காலங்கள் அதாவது 14 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின் ஆகஸ்ட் 15 க்கு முன்பாகவே சென்னை வந்து விடுகிறார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சுதந்திர தின கொடியேற்று விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்” என்று தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்கா பயணத்துக்கு முன்பாக அமைச்சரவை மாற்றம், மாவட்ட செயலாளர்கள் மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்வார் என திமுக வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் ஜூலை 28ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார் ஸ்டாலின். அப்படி என்றால் அதற்குள்ளாகவே இந்த மாற்றங்கள் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
–வேந்தன்