சேலத்தில் நடந்த கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 16) மாவட்ட வளர்ச்சி திட்டம் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நான்கு மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் ஸ்டாலின் அதிகாரிகள் மத்தியில் பேசும் போது,
மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ள இந்த அரசு, மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதை உணர்ந்து, அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளை முறையாக தரமாக செய்து தர வேண்டும்.
அதிகாரிகள் தான் அரசின் முகமாக மாவட்டங்களில் பணியாற்றுகிறார்கள். அதிகாரிகள் கடினமாக உழைத்தால் பொதுமக்களுக்கு பயன் கிடைக்கும்.
வேளாண் உற்பத்தி மதிப்பு கூட்டல் தொடர்பாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களை சந்தித்து பேசினேன்.
விவசாயிகள் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அரசின் நோக்கம். விவசாயிகள் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நகர்ப்புற பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
வேகமாக வளரும் சேலம், ஓசூர் போன்ற நகரங்களில் குப்பைகளை விரைந்து அகற்றுதல், பழுதான சாலைகளை சீர் செய்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.
ஆதிதிராவிடர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கான நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்களை கனிவாக நடத்த வேண்டும்.
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவோருக்கு உதவ ஆட்களை நியமிக்க வேண்டும். காவல்நிலையத்தில் வரவேற்பு அலுவலர் இருப்பது போல, மற்ற அரசு அலுவலகங்களிலும் அதுபோன்று மக்களை வரவேற்பவர்கள் இருக்க வேண்டும்.
அரசு திட்டங்களை காலத்தே கொண்டு சேர்க்க அதிகாரிகள் முனைப்போடு செயலாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கலை.ரா
‘தேர்தலை குறிவைத்து கள ஆய்விற்கு செல்கிறார் முதல்வர்’: ஜெயக்குமார்
நூறு ஆண்டுகளைக் கடந்தும் மெனுவை மாற்றாத அதியச ஹோட்டல்!