இவ்வளவு செலவா? ஆளுநருக்கு ஆடம்பரமான மாளிகை எதற்கு?

Published On:

| By Monisha

தமிழ்நாடு முதல்வர் ஆளுநருக்கான செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில், அச்சட்டம் காலாவதியானது. இதனால் ஆளுநருக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆளுநருக்கான செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய நாளேடுகளில், தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான, அதிர்ச்சியூட்டக்கூடிய இரண்டு செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவிலேயே ஆளுநருக்காக மிகுதியாகச் செலவு செய்யும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பது முதல் செய்தி. குடியரசுத் தலைவர், ஆளுநர் ஒப்புதலுக்காக, ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கும், தமிழ்நாடு நிறைவேற்றிய சட்ட முன்வடிவுகள் 66 என்பது இரண்டாவது செய்தி.

ஆண்டு ஒன்றுக்கு ஆளுநருக்காக 6.5 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்று கூறும் அந்தச் செய்தி, உ.பி. போன்ற மாநிலங்களை விடவும் இது மிகக் கூடுதல் என்று சொல்கிறது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் கூட, 3.5 கோடிதான் செலவிடப்படுகிறதாம். மற்ற மாநிலங்களை விடக் கூடுதலாக, மக்களின் வரிப்பணத்தை ஏன் இப்படி நாம் செலவழிக்க வேண்டும்?

ஒருவேளை, நம் ஆளுநர் மிக விரைந்து செயல்படுகிறார் என்றால் கூட, கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். ஆனால் நிலைமை முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் காத்துக்கிடக்கும் கோப்புகளைக் கழித்துவிட்டால் கூட, 20க்கும் மேற்பட்ட கோப்புகள் இங்கே ஆளுநர் மாளிகையிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

சென்ற ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் உள்பட, இப்போது அனுப்பிவைக்கப்பட்டுக் காலாவதியாகி விட்ட ஆன்லைன் ரம்மி தடுப்புச் சட்ட முன்வடிவு வரையில் இதில் அடக்கம்.

செலவு ஒருபுறமிருக்க, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 156.14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அம்மாளிகையில் நூற்றுக்கணக்கான அறைகள் உள்ளன என்று கூறுகின்றனர். தன் பணியைக் கூடச் செய்யாத ஓர் ஆளுநருக்கு இத்தனை செலவும், இத்தனை ஆடம்பரமான மாளிகையும் ஏன் என்று கேள்வி கேட்க, இந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.

எனவே தமிழ்நாடு முதல்வரும், தமிழக அரசும், ஆளுநருக்கான செலவை உடனே குறைக்க வேண்டும் என்றும், ஆளுநர் மாளிகையின் பரப்பளவைக் குறைக்க வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

சாபக்கேடு : ஆளுநர் செயல் குறித்து துரை வைகோ

சிம்பு குரலில் ”தீ தளபதி”!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.