ஆளுநரை முதல்வர் சந்திக்க வேண்டும்: அன்புமணி

அரசியல்

தமிழக முதலமைச்சர் உடனடியாக ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு அனுமதி பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான இவர் நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி உள்ளார்.

கடன் சுமை அதிகமானதால் மனமுடைந்த இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆட்கொல்லியாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்குப் பலியாகியுள்ளனர்.

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது.

இது குறித்து அமைச்சரே நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாட்களாகின்றன. ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்துகிறது.

ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

பணியில் இல்லாத 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்: அமைச்சர் உத்தரவு!

சரக்குக்கு சைடிஷான நாய்க்குட்டியின் வால்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *