படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று (ஜூலை 9) நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொத்தூரில் புத்த மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இந்த படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பூர் அயனாவரம் பகுதியில் இருக்கும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்றார். அங்கு கண்ணீருடன் முறையிட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் படத்திற்கு முதல்வர் மரியாதை மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் சேகர்பாபுவும் சென்றிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா