‘தமிழ் மான மறவர்’ – நெடுஞ்செழியனுக்கு முதல்வர் இரங்கல்

அரசியல்

தமிழறிஞரும், தமிழக திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழறிஞரும், தமிழக திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன்(79) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (நவம்பர் 4) காலமானார்.

பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

Chief Minister condoles the death of Nedunchezhiyan

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,

‘தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் – முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன்.

கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை’ நான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்கள்.

அப்போது உரையாற்றிய நான், ”2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறும் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் அறிவுத் திறத்தைச் சொல்வதாக இருந்தால் பல மணி நேரம் ஆகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் – இனமானப் பேராசிரியர் அவர்களும் இன்று இருந்திருந்தால் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு விருது வழங்கும் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள். பல்வேறு நூல்களைப் படைத்தவர்.

தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வருபவர் பேராசிரியர். எழுதுபவர் மட்டுமல்ல, இன உரிமைப் போராளி அவர்.

அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும்’ என்று நான் குறிப்பிட்டேன். அத்தகைய படைப்பாளியாகவும் போராளியாகவும் இருந்தவரைத்தான் இழந்துள்ளோம்.

Chief Minister condoles the death of Nedunchezhiyan


அவர் உடல்நலிவுற்ற செய்தி அறிந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி நலம் பெற ஏற்பாடுகளைச் செய்தோம்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் அவரைச் சென்று பார்த்து நலம் அறிந்து வந்தார்.

நலம் பெற்றுத் திரும்பி தனது அறிவுலகச் செயல்களைத் தொடர்வார் என்று பெரிதும் நம்பினேன்.

ஆயினும், அவரது உடல் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் மறைந்து விட்டார்.
அவரது அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட உதவவே செய்யும்.

‘தமிழ் மரபும், பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர்’ என்று இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் புகழ் வாழ்க!

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

கொளத்தூர் கன்னித்தீவா? – அமைச்சர் கே.என்.நேரு பதில்!

குஜராத் தேர்தல் : மோடி – ராகுல் – கெஜ்ரிவால்…மக்கள் செல்வாக்கு யாருக்கு? அதிரடி சர்வே முடிவு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published.