தலைமை நீதிபதி பதவியேற்பு : முதல்வர் வருவதற்குள் ஆளுநருக்கு என்ன அவசரம்?

அரசியல்

முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் நேரத்தில் அவசரமாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பதவியேற்பு ஏன் என்று கொமதேக ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 9 மாதங்களுக்கு பிறகு கொலீஜியத்தின் பரிந்துரைப்படி, நிரந்தர நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜயக்குமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நாளை பதவி ஏற்கிறார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் முதல்வர் தமிழ்நாட்டில் இல்லாத இந்த நேரத்தில் தலைமை நீதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது ஏன் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இன்று (மே 27) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இன்னும் மூன்று நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார். இன்னும் மூன்று நாட்கள் கழித்து பதவியேற்பு விழாவை ஏற்பாடு செய்து முதலமைச்சர் கலந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். 

திடீரென்று முதலமைச்சர் சென்னையில் இல்லாத போது தேதி அறிவிக்கப்பட்டு பதவியேற்பு விழா நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். கடந்த ஏழு மாதங்களாக நீதி அரசர் ராஜா பொறுப்பு நீதிபதியாக பணியாற்றினார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பதவி ஓய்வு பெற்றார்.

அதை தொடர்ந்து நீதிஅரசர் வைத்தியநாதன் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 7 மாதம் பொறுப்பு நீதிபதியின் கீழ் இயங்கிய சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் மூன்று நாட்கள் அதேபோல இயங்கி இருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டிருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.  

மேலும் அவர், “தமிழ்நாட்டினுடைய ஆளுநர், முதலமைச்சர், தலைமை நீதிபதி ஆகிய மூன்று பதவிகளும் ஒரு மாநிலத்தின் முக்கிய பதவிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நீதிமன்றங்களுடைய அனைத்து மேம்பாட்டு பணிகளுக்கும், பராமரிப்புகளுக்கும் தேவையான நிதியை தமிழ்நாடு அரசுதான் ஒதுக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவசர பதவி ஏற்பு நிகழ்ச்சி உள்நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொண்டு திட்டமிட்டு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தால் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் இடையிலான பரஸ்பர உறவு சுமூகமாக இருப்பதற்கு வழி வகுத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார் ஈஸ்வரன்.

பிரியா

மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் : டெல்லி செல்லும் மா.சுப்பிரமணியன்

கர்நாடகா புதிய அமைச்சரவை: யார் யாருக்கு எந்த துறை?

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *