ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 16) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்தோம்.
மக்கள் மத்தியில் ஓர் உற்சாகம் இருந்ததை காண முடிந்தது. அவர்கள் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்றும் விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் விரும்பினார்கள்.
நாடாளுமன்ற தேர்தலின் போது ஜம்மு, காஷ்மீரில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களித்ததே அதற்கு சான்றாகும். அவர்கள் புல்லட்டை விட பேலட்டுக்கே ( வாக்குச்சீட்டு) முன்னுரிமை அளிக்கிறார்கள்.
அதன்படி ஜம்மு, காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் செப்டம்பர் 18 அன்று 24 தொகுதிகள் செப்டம்பர் 26 அன்று 24 தொகுதிகள் அக்டோபர் 1 அன்று 40 தொகுதிகள் என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும்.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது” என்றார்.
ஜம்மு, காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பின்னர் 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய்ப்பட்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்பு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவில்லை.
இந்தசூழலில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அங்கு 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
ஹரியானாவை பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. வரும் அக்டோபர் மாதத்துடன் முதல்வர் நயப் சிங் சைனி அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழைக்கு தயாராகுங்கள் மக்களே!
ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்.ஐ கலைச்செல்வி மீது தாக்குதல்… நேபாள பெண் கைது!