சத்தீஸ்கர், மிசோரம் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?

Published On:

| By Selvam

மிசோரம் மாநிலத்தில் 76.66 சதவிகிதமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 70.8 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.

மிசோரம் 

மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  174 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 1274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் 40 தொகுதிகளிலும், பாஜக 23, ஆம் ஆத்மி 4 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

மிசோரம் முதல்வரும் மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா வடக்கு ஐஸ்வால் தொகுதிக்குட்பட்ட வெங்கலாய் 1 ஒய்.எம்.ஏ ஹால் வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களிக்க வந்தபோது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்காமல் திரும்பி சென்றார்.

பின்னர் மீண்டும் வந்து வாக்கு செலுத்தினார். மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மிசோரம் மாநிலத்தில் 76.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சர்சிப் தொகுதியில் 83.96 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 81.61 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. நக்சல் தீவிரவாதிகள் மிகுந்த 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்றது.

சுக்மா மாவட்டத்தில் உள்ள தொண்டமார்கா தொகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார். மாவோயிஸ்டு ஆதிக்கம் அதிமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாலை 4 மணி நிலவரப்படி 70.87 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சுயிக்காதங்கதாயி தொகுதியில் 76.31 சதவிகிதமும் குறைந்தபட்சமாக பிஜாபூர் தொகுதியில் 40.98 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு 18 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76.42 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சனாதன விவகாரத்தில் உள்நோக்கத்துடன் வழக்கு: சேகர்பாபு வாதம்!

கொடநாடு வழக்கு : எடப்பாடிக்கு நீதிமன்றம் விலக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share