சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்று (டிசம்பர் 3) மதியம் நிலவரப்படி பாஜக முன்னிலையில் உள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த நவம்பர் 7,17 தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதலில் 20 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 78 சதவிகித வாக்குகள் பதிவானது. 70 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.15 சதவிகித வாக்குகள் பதிவானது.
இந்த வாக்குகள் இன்று (டிசம்பர் 03) எண்ணப்பட்டு வருகின்றன. காலை நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில், அதை தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பிற்பகல் 2.28 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்புப்படி சத்தீஸ்கர் மாநிலத்தில், 55 இடங்களில் பாஜகவும், 32 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், கோண்ட்வானா கந்தன்ட்ரா கட்சி (ஜிஜிபி), பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் இந்த தகவல் மூலம் சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்வது உறுதியாகியுள்ளது. பெரும்பான்மை 46 என்ற நிலையில் கூடுதலாக 9 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
2000ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்ட பின் 2003ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலை எதிர்கொண்டது.
இதில் 2003-2018 வரை பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 15 ஆண்டுகள் சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்தது.
2003
2003 தேர்தலில் காங்கிரஸ் -37, பாஜக – 50, பகுஜன் சமாஜ்- 2, தேசியவாத காங்கிரஸ் – 1 இடத்தை பிடித்தன.
2008
2008 தேர்தலில் காங்கிரஸ் -38, பாஜக -50, பகுஜன் சமாஜ்- 2 இடங்களை பிடித்தன
2013
2013 தேர்தலில் காங்கிரஸ் – 39, பாஜக – 49, பகுஜன் சமாஜ்- 1, சுயேட்சை -1 இடத்தை பிடித்தன.
2018
2018 தேர்தலில் காங்கிரஸ் – 68, பாஜக -15, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் -5, பகுஜன் சமாஜ் – 2 இடங்களை பிடித்தன.
2018ல் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது.
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 தேர்தலில் விட்டதை 2023 தேர்தலில் பிடித்துள்ளது பாஜக.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளிர் பிரதேசமான மத்திய பிரதேசம்
மூன்று மாநிலத்தில் வெற்றி உறுதி… ராகுல், உதயநிதியை தாக்கும் பாஜகவினர்!
இந்திய சினிமாவில் தொடரும் ஷாருக்கான் சாதனைகள்!