சென்ற வருடம் மஹாராஷ்ட்ராவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, பலத்த காற்றின் காரணமாக உடைந்து விழுந்தது. இந்த சம்பவம் மஹாராஷ்ட்ரா அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது
சென்ற வருடம் இந்தியக் கடற்படையால் மஹாராஷ்ட்ரா சிந்துதுர்க் மாவட்டத்தில் 2.3 கோடி ரூபாய் செலவில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை பிரதமர் மோடி 2023 டிசம்பர் 4 ஆம் தேதி, இந்திய கடற்படை தினம் அன்று திறந்து வைத்தார்.
சத்ரபதி சிவாஜியை மஹாராஷ்ட்ராவை சார்ந்த பல்வேறு சாதி மற்றும் மதத்தை சார்ந்த மக்கள் காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.
அவரது சிலையை திறந்து வைப்பதன் மூலம், 2024 மக்களவை தேர்தல் மற்றும் வர இருக்கிற மஹாராஷ்ட்ர சட்டமன்ற தேர்தல்களில் அதிக வாக்குக்களை பெற்று விடலாம் என்று பாஜக கட்சி நினைக்கிறது என்று அன்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
ஆனால் சிவாஜி சிலை இடிந்து விழுந்தது மோடிக்கே பேக் ஃபயர் ஆகியிருக்கிறது.
சிவாஜியின் சிலை உடைந்து விழுந்த சம்பவம் எதிர்க்கட்சியினருக்கு பாஜகவை விமர்சிக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் இதற்கு ஆளுங்கட்சியினர் அளித்த பதில்கள் படு வினோதமாக இருந்தது. மஹாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே “45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடித்ததால்தான் சிலை உடைந்து விழுந்தது என்று சிந்துதுர்க் மாவட்ட ஆணையர் என்னிடம் தெரிவித்தார்” என்று கூறியிருந்தார்.
பாஜகவைச் சார்ந்த மஹாராஷ்ட்ராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் “இந்தியக் கடற்படையாலும், சிலையை வடிவமைத்த கலைஞராலும் காற்றின் வேகத்தையும், உப்புத்தன்மையையும் கணித்திருக்க முடியாது “ என்று பதிலளித்திருந்தார்.
ஆனால் அம்மாநில மக்களோ, ‘இங்கு சர்வ சாதாரணமாக 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதைப் போல் சின்ன பிள்ளைத்தனமாக பதில் அளிப்பதை மஹாராஷ்ட்ர அரசு தவிர்க்க வேண்டும்” என்கிறார்கள்.
சிலை உடைந்த சம்பவத்தைக் கண்டித்த உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா, ஷரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள ‘மஹா விகாஸ் அகாதி’ கூட்டணி, தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னால் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை அறிவித்திருந்தது.
ஆனால் வருகிற நவம்பர் மாதத்துடன் மஹாராஷ்ட்ராவின் சட்டமன்றம் முடிவடைகின்ற நிலையில் அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இது மஹாராஷ்ட்ரா அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “கடந்த வருடங்களில் ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநில சட்டமன்ற தேர்தல்கள் ஒன்றாகத் தான் நடந்தன.
இந்த முறையும் அப்படி வைத்திருக்கலாம் தான். இந்த வருடம் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மஹாராஷ்ட்ரா மற்றும் ஜார்கண்ட் என்று 4 தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இதனை தொடர்ந்து, அடுத்த வருடம் தொடக்கத்திலேயே டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.
ஆனால் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்குக் கூடுதல் பாதுகாப்புப் படைகள் தேவைப்படுவதால், இந்த ஆண்டுக்கான நான்கு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தாமல், இரண்டு இரண்டாக பிரித்து நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.
மேலும் மஹாராஷ்ட்ராவில் தற்போது மழைக்காலம் மற்றும் விநாயக சதுர்த்தி, தீபாவளி, அமாவாசை போன்ற பண்டிகைகள் வரவிருக்கின்றன. இத்தனையையும் கருத்தில் கொண்டுதான் மஹாராஷ்ட்ராவின் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
ஒரு சட்டமன்றம் காலாவதியாகும் தேதிக்கு முன்னால் இருக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்பது தான் விதி. அதனால் மஹாராஷ்ட்ரா தேர்தல் இந்த விதிக்குட்பட்டு நடைபெறும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை முன்னாள் அமைச்சரும் பால் தாக்கரேவின் பேரனுமான ஆதித்யா தாக்கரே, “இத்தனை வருடங்களாக ஜம்மு காஷ்மீரின் நிலைமை மாறிவருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்த பாஜகவின் பொய்யைத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. மேலும் மஹாராஷ்ட்ராவில் தேர்தல் நடத்துவதற்கு மேலிடத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி கிடைக்கவில்லைப் போல” என்று விமர்சித்திருந்தார்.
மஹாராஷ்ட்ரா பாஜக கூட்டணி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம், 21 முதல் 60 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு, ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.1500 வழங்கும் ‘லட்கி பஹின்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது வரை 1.7 கோடி பெண்கள் இத்திட்டத்தினால் பலன் பெற்றுள்ளார்கள். இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மஹாராஷ்ட்ரா அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும் 65 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.3000 வழங்க ஒரு புதிய திட்டத்தையும் அமல்படுத்த மஹாராஷ்ட்ரா அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த காரணத்திற்காகவும் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆலோசனையின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மஹாராஷ்ட்ரா தேர்தலை அறிவிக்கவில்லை என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இப்படி பாஜகவிற்கு அடி மேல் விழுந்து கொண்டிருந்ததை சமாளிக்க தான், ஆகஸ்ட் 30-ஆம் தேதி மஹாராஷ்ட்ர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ‘வதாவன் துறைமுகத்தின்” அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, “சிவாஜி மஹாராஜ் ஒரு ராஜா மட்டும் அல்ல, அனைவராலும் வணங்கப்படும் ஒரு நபர். அவரது சிலை உடைந்ததற்கு அவரது பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கண்கள் கலங்கிய படியே பேசியுள்ளார்.
மேலும் அவர், “சிலர் வீர் சாவர்க்கரை பற்றித் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருகிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்பதற்குத் தயாராக இல்லை” என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கினார்.
பிரதமரின் இந்த பேச்சு, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்த நிகழ்வு எந்த அளவிற்கு மஹாராஷ்ட்ராவில் பாதிப்பை உண்டுபண்ணியிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது.
பிரதமர் இப்படிப் பேசியும், மஹாராஷ்ட்ரா எதிர்க்கட்சியினர் இந்த பிரச்சினையை விடவில்லை. செப்டம்பர் 1-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘மஹா விகாஸ் அகாதி’, ‘ஜோடே மாரோ’ – அதாவது செருப்பை எடுத்து அடியுங்கள் என்கிற பெயரில் ஒரு போராட்டத்தை நடத்தியது.
அதில் பேசிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, “பிரதமர் மோடியின் பேச்சில் திமிர் தெரிந்தது. எதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்? சிலையை எட்டு மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்ததற்காகவா அல்லது சிலை செய்வதில் நடந்துள்ள ஊழலுக்காகவா? ‘மஹா விகாஸ் அகாதியின்’ அனைத்து உறுப்பினர்களும் கூட்டாக உழைத்து, சிவாஜி மஹாராஜை இழிவுபடுத்திய நபர்களைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்று பேசினார்.
கடந்த 2019 –ஆம் ஆண்டு பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து மஹாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டன. 161 தொகுதிகளில் வெற்றியும் பெற்றன.
ஆனால் யார் முதல்வர் பதவி வகிப்பது என்பதில் இருவருக்குள் சண்டை ஏற்பட்டதால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சண்டையால் சிவசேனா இரண்டாக பிரிந்தது மட்டுமல்லாமல், தேசிய காங்கிரஸ் கட்சியும் இரண்டாக பிரிந்தது.
பின்னர் ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவும் பாஜக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சி இந்த வருடம் நவம்பர் 26 முடிவடைய இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த சம்பவம், அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் வருகிற மஹாராஷ்ட்ரா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மோடி அறிவிப்பு!
பெற்றோருடன் இணக்கம்…மனைவியுடன் நெருக்கம்… விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த பின்னணி!
விஜய் பட பெயரில் சனாதனம்?: ரவிக்குமாரின் பதிவுக்கு தமிழிசை பதில்!